பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் மிதவாதத்தை ஊக்குவிப்பவராக இருந்தால், அதை நிரூபிக்க மலாய் உரிமைகளுக்காக போராடும் அமைப்பான பெர்காசாவுடன் எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும்.
அதைச் செய்யத் தவறினால், உலகளாவிய மிதவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் நஜிப்பின் முயற்சியெல்லாம் “வெறும் அரசியல் மோசடிதானே தவிர வேறு ஒன்றுமல்ல” என்றுதான் பொருள்படும் என்கிறார் டிஏபி விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா.
“பெரும்பாலும் அம்னோ உறுப்பினர்களை”க் கொண்டுள்ள பெர்காசா, “அம்னோவுக்குச் சொந்தமான மைய நீரோட்ட ஊடகங்களில்” சமயங்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அறிக்கைகளை விடுத்து மிதவாதத்துக்கு எதிராக செயல்படுகிறது என்று புவா இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
“அண்மையில் பெர்காசா தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் ‘சிலாங்கூரில் இஸ்லாமிய சமயம் முற்றுகைக்கு இலக்காகியுள்ளது…..அங்கு ஆட்சிக்குழுவில் காலிட்(இப்ராகிம்) இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள நிலையில் கிறிஸ்துவர்கள் மதமாற்றும் முயற்சிகளில் தீவிரம் காட்டலாம் என்று பெர்காசா கவலையுறுகிறது’ என்று குறிப்பிட்டிருப்பது கிறிஸ்துவ-எதிர்ப்பு உணர்வுகளைக் கிளறி விடுவதாக அமைகிறது”, என்று புவா கூறினார்.
நஜிப், சமய சகிப்புத்தன்மையைக் கெடுப்பதற்காகவும் தீவிரவாத போக்குக்காகவும் பெர்காசாவைக் கண்டிக்க வேண்டும்.ஆனால், அவர் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலியைச் சமாதானப்படுத்த தம் கொள்கைகளில் பல்டி அடிப்பதைத்தான் அடிக்கடி பார்க்கிறோம் என்று அந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி குறிப்பிட்டார்.
கடந்த வாரம்,நஜிப் உலகளாவிய மிதவாத இயக்கம் மீதான பன்னாட்டு மாநாட்டில் உரையாற்றியபோது “மிதவாதிகள் அமைதித் திட்டத்தை மேற்கொள்ளவும் தீவிரவாதிகளை ஓரங்கட்டவும் தருணம் வந்துவிட்டது” என்று கூறியிருந்தார்.