ஐநா அமைதி காக்கும் படையில் இலங்கை போர்க்குற்றவாளிக்கு முக்கிய பொறுப்பு

ஐநா மன்றத்திற்கான சிறீலங்காவின் துணைத் துதர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் சார்பிலேயே இவர் இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குழுவில் அங்கம் வகிக்கும் உயர்மட்டத் தூதுவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பணியாற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய பொறுப்பு ஒன்றில் சிறீலங்காவைச் சேர்ந்த, அதுவும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவர் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்த ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நாவின் முன்னாள் துணைச்செயலாளரும் கனடாவின் முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லூயிஸ் பிரெசிரே, ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான கீழ்நிலைச் செயலாளருமான ஜீன் மேரி குகேனோ ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு முதல்முறையாக இம் மாதம் கூடி தமது பணிகளை கவனிக்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா போர்க்குற்றங்களை இழைத்ததாக அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGS: