“அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றி ‘டத்தோ டி’ மூவரில் ஒருவரை மேற்கோள் காட்டி அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா நேற்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய தோற்றத்தை களங்கத்தை ஏற்படுத்தும் இன்னொரு முயற்சி ஆகும்.”
இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார். “உத்துசான் மலேசியாவில் முன்னாள் பெர்க்காசா தலைமைப் பொருளாளர் ஷுய்ப் லாஸிம் வெளியிட்டுள்ள அறிக்கை, அன்வாருடைய தோற்றத்துக்கு களங்கத்தை விளைவிக்கும் பொருட்டு ஜோடிக்கப்பட்ட புதிய செக்ஸ் வீடியோவை வெளியிடுவதற்கு அடித்தளத்தை வகுப்பதாகும்,” என்றார் அவர்.
“13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க இது போன்று மேலும் பல ஆபாச வீடியோக்கள் ஜோடிக்கப்பட்டு வெளியிடப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என சுரேந்திரன் நேற்றுப் பின்னேரம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
அம்னோவும் பிஎன் -னும் பின்பற்றுகின்ற “கறை படிந்த நாகரீகமற்ற” தந்திரங்கள் அவை என்றும் அவர் வருணித்தார்.
அன்வாரை போன்று தோற்றமளிக்கும் ஒருவர் கிழக்காசிய வம்சாவளியைச் சேர்ந்த மாது ஒருவருடன் காணப்படும் செக்ஸ் வீடியோவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர கர்கோசா ஸ்ரீ நெகாரா ஹோட்டலில் “டத்தோ டி” மூவர் பத்திரிக்கையாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தனர்.
ஷுய்ப், வணிகரான ஷாஸ்ரில் எஸ்கே அப்துல்லா, முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரஹிம் தம்பி சிக் ஆகியோரே டத்தோ டி என அழைக்கப்படும் மூவர் ஆவர்.
செக்ஸ் வீடியோவில் அம்னோ கைவிரல் ரேகைகள்
அன்வார் இப்ராஹிம் முதலாவது செக்ஸ் வீடியோவை தடயவியல் சோதனைகள் மூலம் நிராகரிக்க வேண்டும் இல்லை என்றால் அவர் சம்பந்தப்பட்ட புதிய வீடியோ வெளியிடப்படும் என ஷுய்ப் விடுத்துள்ள மருட்டலுக்குப் பதில் அளித்த சுரேந்திரன், அது அம்னோவின் “வெட்கமில்லாத விரக்தி அடைந்த” தந்திரம் என நிராகரித்தார்.
“அந்த செக்ஸ் வீடியோவை நாடு முழுவதும் பரவலாக யாரும் நம்பவில்லை. அந்த வீடியோ ஜோடிக்கப்பட்டது என்பதை பொது மக்களுக்கு உணர்த்துவதற்காக அன்வார் இப்ராஹிம் தடயவியல் சோதனைகளுக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை.”
“அன்வாருக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட செக்ஸ் வீடியோவை தயாரித்து அவர்கள் விநியோகம் செய்துள்ள வேளையில் டத்தோ டி அன்வாருக்கு எதிராக சவால்களை விடுப்பது மிகவும் கொடுமையானது,” என சுரேந்திரன் சொன்னார்.
முந்திய செக்ஸ் வீடியோவை வெளியிடுவதில் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவரான ரஹிம் சம்பந்தப்பட்டுள்ளது, முதலாவது செக்ஸ் வீடியோ அத்தியாயத்தில் அம்னோ கைவிரல் ரேகைப் பதிவுகள் இருப்பதற்கு தக்க சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலாவது செக்ஸ் வீடியோவில் காணப்படும் மனிதர், தாம் எனக் கூறப்படுவதை மறுத்து அன்வார் போலீசில் புகார் செய்துள்ளார். அதே வேளையில் ஆபாசப் படத்தை பொது மக்களுக்குப் போட்டுக் காண்பித்ததற்காக டத்தோ டி மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போலீஸ் இப்போது அன்வார் சமர்பித்த போலீஸ் புகாரைப் பயன்படுத்தி “மற்றவருக்கு காயத்தை ஏற்படுத்தக் கூடிய தவறான தகவலை” கொடுத்ததாக குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் அன்வாரை விசாரித்து வருகின்றனர்.