புவா: இபிஎப் பணத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது

குறைந்த-விலையிலும் அடக்க விலையிலும் வீடுகள் கட்டிக்கொடுக்கும் முயற்சிகளை வரவேற்றாலும் அத்திட்டங்களுக்காக ஊழியர் சேமநிதி(இபிஎப்) பயன்படுத்தப்படுவது குறித்து டிஏபி எச்சரிக்கிறது.

“இத்திட்டங்களுக்கு இபிஎப்-பிலிருந்து நிதியுதவி செய்யக்கூடாது. குறைந்த அபாயம்கொண்ட திட்டங்களில் முதலீடு செய்து முடிந்தவரை உயர்ந்த ஆதாயம் பெற்று 11 மில்லியன் மலேசியர்களின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட பணத்தைக் காப்பதுதான் இபிஎப்-பின் நோக்கமாகும்”, என்று டிஏபி பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா இன்று கூறினார்.

பணி ஓய்வு பெறுவோருக்கு நிதிப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் இபிஎப் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் பொருட்டு “அவர்களின் சேமிப்பை விவேகமான முறையில் முதலீடு செய்யும்” கடப்பாடு அதற்கு உண்டு.

“வீடமைப்புத் திட்டங்களுக்கு அரசாங்கம் சொந்தமாக நிதிகளைத் தேடிக்கொள்ள வேண்டுமே தவிர, அதன் சமூகநலத் திட்டங்களுக்கு உதவுமாறு இபிஎப்-பைப் பணிக்கக்கூடாது”, என்றாரவர்.

தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் மக்கள் வீடமைப்புத் திட்டத்துக்கும் (பிபிஆர்) கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக பொதுவீடமைப்புத் திட்டத்துக்கும் இபிஎப் “எளிய நிபந்தனைகளில்” ரிம1.5மில்லியன் கடன் வழங்கும் என த சன் நாளேடு திங்கள்கிழமை அறிவித்திருந்தது.

அப்பணம், கூட்டரசு பிரதேச அறவாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிலிருந்து சுமார் 20,000பேருக்கு வீடுகள் வாங்கக் கடன் வழங்கப்படும் என்றும் கடன்கள் 15-இலிருந்து 25 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் கூட்டரசுப் பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா சைனல் அபிடின் கூறியதாகவும் அந்நாளேடு கூறியிருந்தது.

“இபிஎப் ஏழைகளைக் கடனுதவி செய்யும் நிறுவனமல்ல. அது சமூகநல அமைப்புமல்ல”, என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பியான புவார் குறிப்பிட்டார்.

பொருளகங்கள்தான் கடன் கொடுக்க வேண்டும்

இபிஎப் பணம்,வீடு வாங்கப் “பொருளகங்களில் நிதியுதவி பெற முடியாதவர்களுக்கு”கடனாகக் கொடுக்கப்படும் என்றும் அப்படிக் கொடுக்கப்படுவது நல்லதல்ல என்றும் புவா கூறினார்.

“அரசாங்க அத்துமீறலுக்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. வீடு வாங்குவோர் பணம் செலுத்தத் தவறினால் இபிஎப் பணம் பறிபோகுமோ என்ற அச்சத்தைப் போக்குவதற்காக வீடுகளின்மேல்தான் கடன் கொடுக்கப்படுகிறது என்றும் அந்த வகையில் கடனுக்கு உத்தரவாதம் உண்டு என்றும் ராஜா நோங் சிக் தைரியம் சொல்கிறார்.

“ஆனால், வீடுகளை வைத்துக்கொண்டு கடன் கொடுக்கலாம் என்றால் வணிகப் பொருளகங்கள் ஏன் அதைச் செய்யவில்லை? இபிஎப்-பிலிருந்து எதற்காக வீட்டுக்கடனைக் கொடுக்க வேண்டும்?”, என்றவர் வினவினார். 

வீடு வாங்க இபிஎப்-பிலிருந்து கடன் கொடுப்பதை விடுத்து பேங்க் ரக்யாட் அல்லது மலேசியக் கட்டுமானக் கழகம் (எம்பிஎஸ்பி) போன்றவற்றுக்கு தனி நிதிகளை ஒதுக்கி அவற்றின் மூலமாக எளிய நிபந்தனைகளில் கடனுதவிகளைச் செய்யலாம்.

“இபிஎப் பணத்தைச் சமூக நலத்திட்டத்துக்குப் பயன்படுத்தி ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி விட்டால், எதிர்காலத்தில் அதிகார அத்துமீறல் பெருகி சமூகநலத் திட்டம் என்ற பெயரில் அரசியல் திட்டங்களுக்கெல்லாம் இபிஎப் பணத்தைக்கொண்டு நிதியுதவி செய்கின்ற நிலை உருவாகி விடும். அது, இபிஎப் சந்தாதாரர்கள் தங்கள் எதிர்காலத்துக்காக செய்துவைத்துள்ள சேமிப்புக்குக் கேடாக அமைந்து விடும்”, என்று புவா கூறினார்.

இபிஎப் வாரியமும் முதலீட்டு வாரியமும் இத்திட்டத்தை மறு ஆய்வு செய்து ஊழியர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்தி இபிஎப் பணத்துக்குக் கேடு செய்யும் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

TAGS: