பினாங்கு டிஎபி ஒரே மாதிரியான அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட பல வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளது. அவர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என அது அஞ்சுகிறது.
90 வயதுக்கும் மேற்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருந்தும் அவர்களுடைய பெயர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதையும் அந்தக் கட்சி கண்டு பிடித்துள்ளது.
பத்து மாவ்ங் வாக்காளர் பட்டியலில் கேம் துன் ரசாக், மார்க்காஸ் 2 டிவிஷனில்( Kem Tun Razak, Markas 2 Divisyen ) அடையாளக் கார்டு முரண்பாடுகள் காணப்படுவதாக கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வெய் ஏய்க் கூறினார்.
அந்த பத்து மாவ்ங் தொகுதி தற்போது பிகேஆர் கட்சியின் அப்துல் மாலிக் அபுல் காசிம் வசமுள்ளது. அந்தத் தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 1,400 அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரையில் மூன்று ஜோடி வாக்காளர்களுக்கு ஒரே அடையாளக் கார்டு எண்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இங் சொன்னார்.
அவர்கள் வருமாறு: Roziah bt Nordin and Sujiah bt Mohd Sidek (7225477); Gustina bt Ahmad , Zarina bt A Rahim (A1283855) and Norazwani bt Daud and Rohaila bt Zulkifli (A3455269).
“பத்து மாவ்ங் முகாமில் புதிதாக 1,400 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்ததும் நாங்கள் வாக்காளர் பட்டியலை சோதனை செய்தோம். அவர்கள் ஆவி வாக்காளர்கள் என நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்றார் இங்.
அந்த அறுவருக்கும் புதிய அடையாளக் கார்டு எண்கள் இருப்பதையும் நாங்கள் கண்டு பிடித்தோம். இராணுவ வீரர்களான அவர்களுடைய கணவர்களுக்கும் மாறுபட்ட எண்கள் (அவர்களுடைய உண்மையான அடையாளக் கார்டு எண்களிலிருந்து) இருப்பதும் தெரிய வந்தது.”
“தேர்தல் ஆணையத்தில் ஏதோ கடுமையான கோளாறு இருப்பதை அது காட்டுகிறது,” என இங் மேலும் சொன்னார்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பினாங்கு மாநிலத்தில் 26,000 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தகவல் வெளியிட்டார்.
முகவரி மாற்றம் அல்லது மரணம் காரணமாக 6,000 பேர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.