இபிஎப் வீடமைப்புத் திட்டத்தை நிராகரியுங்கள் என தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள்

குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு இபிஎப் என்னும் ஊழியர் சேம நிதியிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டை பயன்படுத்தும் யோசனையை அந்த நிதியின் வாரியத்தில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களும் தொழில் நிபுணத்துவப் பேராளர்களும் நிராகரிக்க வேண்டும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

“இபிஎப் வாரியத்தில் இடம் பெற்றுள்ள எம்டியூசி என்ற மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஊழியர் சேம நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதை வன்மையாக ஆட்சேபிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இபிஎப் வாரியத்தில் எம்டியூசி தலைவர் முகமட் காலித் அத்தானும் ஊழியர்களின் மேலும் மூன்று பேராளர்களும் அங்கம் பெற்றுள்ளனர்.”

“தேசிய ஆசிரியர் சங்கத் தலைமைச் செயலாளர் லோக் இம் பெங், சரவாக் வங்கி ஊழியர் சங்கத்தின் ஹாடியா லீன், சபா வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் அஸ்லின் அவாங் சீ ஆகியோர் மற்றவர்கள்,” என புவா விடுத்த அறிக்கை கூறியது.

லீ லாம் தாய், ஹெங் ஹொக் செங், ஹலிம் டி ஆகியோர் அந்த வாரியத்தில் இடம் பெற்றுள்ள தொழில் நிபுணத்துவப் பேராளர்கள் ஆவர். அந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதின் மூலம் அவர்கள் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என புவா கேட்டுக் கொண்டார்.

“அந்தக் குறைந்த விலை வீடமைப்புத் திட்டம் மலேசியத் தொழிலாளர்களுடைய சேமிப்பை பணயம் வைக்கிறது, இபிஎப் சட்டத்தை மீறுகிறது,” என்றும் புவா குறிப்பிட்டார்.

இபிஎப் இணையத் தளத்தை மேற்கோள் காட்டிய புவா, தனது உறுப்பினர்களுடைய சேமிப்புக்களைப் பாதுகாத்து சிறந்த முதலீட்டு நிறுவன நடைமுறைகளுக்கு ஏற்ப அதனை நல்ல முறையில் வளரச் செய்வதே அந்த நிதியின் நோக்கம் எனச் சொன்னார்

“ஆகவே மிக மோசமான கடன் மதிப்பீடுகளைக் கொண்ட தனி நபர்களுக்கான குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு அது பயன்படுத்தப்படக் கூடாது, பணயம் வைக்கப்படக் கூடாது,” எனப் புவா மேலும்  குறிப்பிட்டார்.

TAGS: