பிகேஆரின் மூத்த அரசியல்வாதி ஒருவரின் அந்தரங்கச் செயல்களைக் காண்பிக்கும் புகைப்படங்கள் விநியோகம் செய்யப்பட்டதன் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்காக தேடப்பட்டுவரும் நபரை இந்தோனேசிய அதிகாரிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
இந்தோனேசியாவின் பத்தாம் செண்ட்ரலில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக மலாய்மொழி ஏடான கோஸ்மோ! (Kosmo!) அறிவித்துள்ளது. ஆனால், அப்போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை அது வெளியிடவில்லை.
அந்நபரை மலேசியாவுக்குக் கொண்டுவர சிறிது காலம் பிடிக்கும் என்று கூறிய அப்போலீஸ் வட்டாரங்கள் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தன.
இதனிடையே, பிகேஆர் உறுப்பினர் ஒருவர் பொய்யான பயண ஆவணங்களை வைத்திருந்ததற்காகவும் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் மேலாக தங்கி இருந்ததற்காகவும் பிடிபட்டதாக இந்தோனேசியாவின் டிடேக்(Detik ) இணையதளம் நேற்று அறிவித்திருந்தது.