ராஜா நொங் சிக்கின் சவாலை ஏற்றனர் பக்காத்தான் எம்பிகள்

ஊழியர் சேமநிதிப் பணத்தைக் குறைந்த-விலை வீடுகளுக்கான கடனுதவித் திட்டத்துக்குப் பயன்படுத்துவதுமீது கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்குடன் விவாதமிட பக்காத்தான் எம்பிகள் மூவர் முன்வந்துள்ளனர்.

பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் (படத்தில் வலம் இருப்பவர்), டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா, பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் ஆகிய மூவரும் அமைச்சருடன் விவாதம் செய்ய தயார் என்று கூட்டறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.

அவ்விவகாரம் தொடர்பில் எவரும் தம்முடன் “நேருக்கு நேர் விவாதமிட”வரலாம் என்று ராஜா நொங் சிக் சவால் விடுத்திருப்பதாக ஆங்கிலமொழி நாளேடான மலாய் மெயில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

மாற்றுக்கட்சி எம்பிகள் “ வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வீடு வாங்க உதவி கிடைக்கக்கூடாது என்கிறார்களா? வீடு வாங்க அம்மக்கள் தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறார்களா?”,என்று அமைச்சர் கூறியதாக அது குறிப்பிட்டது.

அதன் தொடர்பில் மாற்றுக்கட்சி எம்பிகள், “குடியிருப்பாளர்கள் முன்னிலையில் நேருக்குநேர் விவாதம் செய்ய வரலாம்”, என்றவர் மேலும் கூறினார்.

விவாதத்துக்குத் தயார் என்று கூட்டறிக்கை விடுத்த மாற்றரசுக் கட்சி எம்பிகள் மூவரும், குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற மக்களுக்கு அடக்கவிலையில் வீடுகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் மேன்மையான நோக்கத்தை பக்காத்தான் ரக்யாட் முழுமனத்துடன் வரவேற்பதாகக் கூறினர்.

“என்றாலும், அந்நோக்கத்தை நிறைவேற்றுவது-நகர்ப்புற வறிய மக்களை வீட்டு உரிமையாளர்களாக்குவது ஆட்சியில் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.அது மலேசிய தொழிலாளர்களின் பொறுப்பல்ல.

“இதன் தொடர்பில் அமைச்சருடன் வெளிப்படையாக விவாதமிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்”, என்றவர்கள் கூறினர்.

பொதுமக்களின் நலன்கருதி இவ்விவகாரத்துடன்  சம்பந்தப்பட்ட எல்லா விசயங்கள் பற்றியும் தெளிவாக விவாதிக்க வேண்டும் என்றும் எந்தவொரு தரப்புக்கும் சாதகமாக இல்லாத வகையில் நியாயமான முறையில் விவாதம் நடைபெற வேண்டும், அப்போதுதான் இச்சர்ச்சைக்குப் பின்னே உள்ள முழு உண்மையும் பொதுமக்களுக்குத் தெரியவரும் என்றும் அவர்கள் கூறினர்.

“விவாதத்துக்குக் கோலாலம்பூரில் உள்ள குறைந்தவிலை வீடமைப்புப் பகுதி குடியிறுப்பாளர்கள் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை, எல்லா மலேசியரும், குறிப்பாக இபிஎப் சந்தாதாரர்கள் அதற்கு வரவேண்டும்.”

நேரில் வர முடியாதவர்களும் அதைக் காண்பதற்கு ஏதுவாக விவாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் நன்றாக இருக்கும் என்றவர்கள் குறிப்பிட்டனர். 

ஒப்பந்த விவரங்களை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் 

அரசாங்க அமைப்புகள் இபிஎப்-புடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களின் உள்ளடகத்தை முழுமையாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் மூன்று எம்பிகளும் வலியுறுத்தினர்.

“அப்போதுதான் விவாதிக்கப்படும் விவகாரம் பற்றி முழு விவரங்களையும் எம்பிகளும் பொதுமக்களும் தெரிந்துகொள்ள முடியும்”, என்றந்த அறிக்கை கூறியது.