குவான் எங்,அம்பிகா ஆகியோரை வெறுக்கத் தூண்டும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் ஒட்டப்பட்டிருந்த (டிடிடிஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது  வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் நேற்று அகற்றப்பட்டன.

ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை அகற்றுவதில் பக்காத்தான் கட்சிகளின் உறுப்பினர்கள், செகாம்புட் குடியிருப்பாளர்கள் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக ஊழியர்கள் ஆகியோர் நேற்று காலையிலிருந்து ஈடுபட்டதாக த சன் செய்தி ஒன்று கூறியது.

சுவரொட்டிகள் தொடர்பாக போலீசார் பத்துப் பேரைக் கைது செய்தார்கள் என செகாம்புட் டிஏபி எம்பி லிம் லிப் எங் தெரிவித்ததாக அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

இதேபோன்ற சுவரொட்டிகள் வங்சா மாஜு, பாண்டான் இண்டா, பாண்டான் ஜெயா, கோத்தா டமன்சாரா ஆகிய இடங்களிலும் காணப்படுவதாக அங்குள்ளவர்கள் முறையிட்டிருக்கிறார்கள் என லிம் கூறினார்.

சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை இரகசிய கேமிராக்களில் படம் பிடித்திருந்தால் அவற்றை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அச்சுவரொட்டிகள் சனிக்கிழமை விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கக் காணப்பட்டன.
ஒரு சுவரொட்டியில் லிம்-மின் படத்தின்கீழ் மலாய்-எதிரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொன்றில் பெர்சே தலைவர் அம்பிகாவின் தேசிய கவிஞர் சமட் சைட்டின் படமும் பொறிக்கப்பட்டிருந்தன.