உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படவிருப்பதைக் கருத்தில் கொண்டு போலீசார் புதிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தங்களது ஆற்றலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“நன்கு கல்வி கற்ற, விஷயங்களை அறிந்த சமுதாயம் உயரிய தரத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே போலீசார் புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்கொள்வதற்கு எழுச்சி பெற வேண்டும். போலீஸ் படை மீது மக்களுடைய நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர்கள் பாடுபட வேண்டும்,” என அவர் சொன்னார்.
கொள்கைப் பிடிப்புள்ள காவல் பணிகள் என்னும் தலைப்பில் நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் நஜிப் உரையாற்றினார்.
“எளிதான தீர்வு ஏதும் கண்ணுக்குத் தென்படாது. நாம் யாரையும் வெறுமனே கைது செய்ய முடியாது. நமக்குப் போதுமான ஆதாரங்கள் தேவைப்படும். திரட்டப்படும் ஆதாரங்களில் எதுவும் விடுபடக் கூடாது. அவை நீதிமன்றத்தில் வலுவாக நிற்க வேண்டும்.”
கடந்த ஆண்டு குற்றச் செயல் விகிதங்களை 40 விழுக்காடு குறைத்துள்ள போலீஸ் படையை நஜிப் பெரிதும் பாராட்டினார். அவர் தமது கூற்றுக்கு என்கேஆர்ஏ என்ற தேசிய முக்கியவம் வாய்ந்த பகுதிகள் குறித்த புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டினார்.
“இதுதான் தொடக்கம். மக்கள் நம்பிக்கையைப் பெற நாம் அயறாது பாடுபட வேண்டும். தாங்கள் பாதுகாப்பாக இல்லை என மக்கள் எண்ணக் கூடும். ஆனால் போலீஸ் அதற்காக மனம் தளரக் கூடாது,” என்றார் அவர்.
போலீசார் தங்களது “மகத்தான” பணிகளை தொடர வேண்டும். அதன் வழி போலீஸ் படை மீது மக்கள் நம்பிக்கை பெருகும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.