தேர்தல் ஆணையம் “கள்ளத்தனமாக தில்லுமுல்லு ” செய்வதாக பிகேஆர் குற்றச்சாட்டுகிறது

தேர்தல் ஆணையம் தொகுதி நடைமுறை என அழைக்கப்படும் ‘Belah Bahagi’ என்ற போர்வையில் சிலாங்கூரில் உள்ள  நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்குள் வாக்காளர்களை சட்ட விரோதமாக இடம் மாற்றி வருகிறது என பிகேஆர் கூறுகிறது.

“வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் அளவுக்கு சட்டவிரோதமான ஒர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தனது நிலையையும் சட்டத்தில் உள்ள விதிமுறைகளையும் பயன்படுத்துகிறது என்பதே உண்மை,” என அந்தக் கட்சியின் தேர்தல் இயக்குநர் பூஸியா சாலே இன்று கூறினார்.

அந்த நடவடிக்கையின் விளைவாக சிலாங்கூர் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை திடீரென்று பெரிதும் கூடியுள்ளது. அது குறித்து துணை வாக்காளர் பட்டியகளில் எந்த விவரமும் இல்லை என அவர்  பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

எடுத்துக் காட்டுக்கு அவர் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியை பூஸியா குறிப்பிட்டார். அங்கு வாக்காளர் எண்ணிக்கை 3,364 கூடியுள்ளது. அந்த விவரம் துணை வாக்காளர் பட்டியலில் குறிக்கப்படவில்லை என்றார் அவர்.

“அந்த நடவடிக்கை வாக்காளர்கள் ரகசியமாக, கள்ளத்தனமாக இடம் மாற்றப்படுவதாகும்.ஒரு  தரப்புக்கு சாதகமாக சீரமைப்பு செய்யப்படுவதாகும்,” என அங்கு இருந்த சுபாங் எம்பி ஆர் சிவராசா கூறினார்.

TAGS: