பெல்டா குறித்து வாதமிடத் தயாரா?-இசா சமட்டுக்கு பிகேஆர் சவால்

பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்(எப்ஜிவிஎச்) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது தொடர்பில் பொதுவிவாதம் நடத்தத் தயாரா என்று  பெல்டா தலைவர் இசா சமட்டுக்கும் பெல்டா விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கும் பிகேஆர் சவால் விடுத்துள்ளது.

நாட்டில் பொதுவிவாதமிடுவது இப்போதைய போக்காக இருப்பதால் அதற்கேற்ப இப்படி ஒரு சவாலை விடுப்பதாக பிகேஆர் வியூகப் பிரிவுத் தலைவர் ரவிஸி ரம்லி, நேற்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“அறிவார்ந்த முறையில் விவாதம் நடத்துவது இப்போது பிரபலமடைந்து வருவதால் அதற்கேற்ப பிகேஆர், எப்ஜிவிஎச்மீது விவாதம் நடத்த அஹ்மட் மஸ்லானையும் இசா சமட்டையும் அழைக்கிறது.பிகேஆரே விவாதத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும்”,என்று ரவிஸி கூறினார்.

விவாதம் பெல்டா பணியாளர்களையும் குடியிருப்பாளர்களையும் கொண்ட ஒரு கூட்டத்தில் நடப்பது நல்லது என்று கூறிய அவர், “அதுவே குழப்பத்தைத் தீர்க்கும் சிறந்த வழியாகவும்” இருக்கும்.

இதற்கான முறையான அழைப்புக்கடிதம் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றாரவர்.

பங்குச் சந்தையில் இடம்பெறுவது பெல்டா பணியாளர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோரின் நலனுக்கு நல்லதல்ல என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொல்ல மாற்றரசுக் கட்சி தயாராக இருக்கிறது.

ஏற்கனவே, பிகேஆர் பெல்டா பிரிவு, குடியிருப்பாளர்களுக்கு உறுதிகூறப்பட்ட ரிம20,000 அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம் என்பதை விளக்குவதற்காக தகவலளிப்புக் கூட்டங்களை பெல்டா குடியிருப்புகளில் நடத்தத் தொடங்கி விட்டது என்றும் ரவிஸி கூறினார்.

பெல்டா தொடர்பான விவகாரங்கள் பற்றி வாதமிட சவால் விடுக்கப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்குமுன்பு,    பாஸ்ஸுடன் தொடர்புகொண்ட அரசுசாரா அமைப்பான அனாக்-கின் தலைவர் மஸ்லான் அலிமான்,  அஹ்மட் மஸ்லானை விவாதத்துக்கு  அழைத்தது  உண்டு.ஆனால், அஹ்மட் மஸ்லான் மறுத்து விட்டார்.

TAGS: