மறுபடியும் காதில் பூ சுற்றப் பார்க்கிறார் மகாதிர்

[-KEE THUAN CHYE]

டாக்டர் மகாதிர் நேரிய முறையில் பேச வேண்டும்.இல்லையேல், வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்.அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் என்று சுட்டிக்காட்டினால் உடனே அவற்றைத் தற்காத்துப் பேசத் தொடங்குவதுடன் ஏமாற்றவும் பார்க்கிறார்.

இப்போது அவர், தாம் பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய விமான நிறுவனத்தை அரசாங்கம் மீட்டெடுத்தது “மிகவும் மோசமான நடவடிக்கை அல்ல” என்று கூறியுள்ளார்.அப்படி என்றால்?  மிகவும் மோசமானதல்ல என்பதற்காக அந்நிறுவனத்தை மீட்டெடுத்தது சரி என்றாகி விடுமா?

நான் சொல்கிறேன்.அது சரி அல்ல. பல மீட்பு நடவடிக்கைகளில் அதை விட  மோசமான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக வாதிட்டாலும்கூட தவறு தவறுதான்.இங்கே  தவறு நிகழ்திருக்கிறது.

அந்நிறுவனத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு மலேசியர்களின் பணம் ரிம1.8பில்லியன் செலவிடப்பட்டது. எம்ஏஎஸ் பங்குகளைச் சந்தைவிலையைவிட இருமடங்குக் கூடுதல் விலை கொடுத்து  அரசாங்கம் வாங்கியது. எதற்காக அப்படிச் செய்யப்பட்டது?

மகாதிர்தான் மற்றவர்கள்மீது பழி போடுவதில் கெட்டிக்காரர் ஆயிற்றே.இப்போது நிதி அமைச்சை நோக்கி விரல் நீட்டுகிறார்.அதுதான் அந்த விலையைப் பரிந்துரைத்ததாம். அப்போது நாட்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்ததை மறந்துவிட்டுப் பேசுகிறாரா அவர்?அமைச்சு சொன்னால் என்ன, தனிப்பட்டவர் பரிந்துரைத்தால் என்ன, அவரைமீறி எதுவும் நடந்திருக்க முடியுமா?

நொடித்துப் போகும் நிலையிலிருந்த எம்ஏஎஸ்ஸைக் காப்பாற்ற அதைச் செய்வது “அவசியமாயிற்று” என்கிறார். அது இருக்கட்டும் முதலில் இதற்குப் பதில் சொல்லுங்கள். தனியார் மயமாக்கல் திட்டத்தின்கீழ்  எம்ஏஸ்-ஸை, விமான நிறுவனம் நடத்துவதில் அனுபவமே இல்லாத தாஜுடின் அலியிடம் ஒப்படைத்தது ஏன்?இதற்கு யாரைக் குற்றம் சொல்வார் மகாதிர்?.

இது போக, மற்ற நிறுவனங்கள்-பேங்க் பூமிபுத்ரா, ரெனோங், புரோட்டோன் போன்றவை- மீட்கப்பட்ட விவகாரங்கள் எல்லாம் என்ன ஆவது?

மகாதிர் சொல்வதுதான் சரி

எம்ஏஎஸ் மீட்பு நடவடிக்கை நியாயமானதே என்று நிறுவ முயலும் மகாதிர், அதைத் தமக்குபின் பிரதமரான அப்துல்லா அஹ்மாட் படாவி இரட்டைத் தண்டவாளத் திட்டத் திட்டத்தை ரத்துச்செய்த நடவடிக்கையுடன் ஒப்பிடுகிறார். அப்படி ஒப்பிடுவதன்வழி அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அந்தத் திட்டத்தில் இவருக்கு என்ன சம்பந்தமிருந்தது என்று தெரியவில்லை, அதை ரத்துச் செய்த அப்துல்லாவை இவர் மன்னிக்கவே இல்லை.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் அப்துல்லாவை வறுத்தெடுக்கிறார்.அதை அடிக்கடியும் செய்கிறார்.கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய்விட்டது.

மகாதிரின் நிலைப்பாடு என்னவென்றால் அவர் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வது தப்பு. அவர் பிரதமராக இருந்தபோது நீதித்துறையை அச்சுறுத்தி அடக்கி வைத்திருந்தார் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது அவற்றையும் அவர் மறுத்தார்.

1988-இல், நாடாளுமன்றத்தில் மூன்றுக்கு இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றிருந்த அவரது ஆளும் கட்சி,  கூட்டரசு அரசமைப்பின் 121 பகுதிக்கு திருத்தம் கொண்டுவந்து, நீதித்துறை நாடாளுமன்றத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு நிலையை உருவாக்கியதை அவர் மறந்துவிட்டாரா, என்ன?

மூன்று வாரங்களுக்குமுன் முன்னாள் தலைமை நீதிபதி ஜைடின் அப்துல்லா அதைக் குறிப்பிட்டபோது அது உண்மைதான் என்று நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசீசும் உடன்பட்டார்.அதற்கு மகாதிரின் எதிர்வினை எப்படி இருந்தது? “இது ஃபிட்னா(அவதூறு)”, என்றார்.

அவர் அந்த விவகாரத்தைத் திசை திருப்பவும் முயன்றார். “நஸ்ரிக்கு என்னைப் பிடிக்காது”, என்றார்.நஸ்ரிக்குப் பிடிக்காது, சரி.ஜைடின்?ஜைடின் பற்றி மகாதிர் ஒன்றும் சொல்லவில்லை.அவருக்கும் மகாதிரைப் பிடிக்காதா? 

இதுதான் மகாதிர் இயல்பு. உண்மையை ஒப்புக்கொள்ள மாட்டார்.மற்றவர்கள் தமக்கு எதிராக இருப்பதுபோலவும் தம்மை ஒழித்துக்கட்ட முயல்வதுபோலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கிக்காட்ட முனைவார்.

நஸ்ரியை மட்டம்தட்டும் நோக்கிலும் அவரது ஆணவத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் இன்னொன்றையும் அவர் சொன்னார்: “அவர் சொல்வதைச் சொல்லட்டும்.அது என்னைக் காயப்படுத்தாது. குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும்.அதனால் மலைகள் நொறுங்கி விழமாட்டா”.

தலைமை நீதிபதி சாலே அபாஸ் நீக்கப்பட்டதற்குத் தாம் காரணம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.அப்படியானால்,அதற்கு யார்தான் காரணம்?

“பேரரசர், (சாலே) நீக்கப்பட வேண்டும் என்றார்”, என்கிறார் மகாதிர். கேட்பவர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள்.மகாதிருக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் உறவு எப்படி இருந்தது என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.அப்படியிருக்க சாலேயை நீக்க வேண்டும் என்று  பேரரசர் விருப்பம் தெரிவித்தார், அதற்கு மகாதிர் உடன்பட்டார் என்பதை எப்படி நம்புவோம்? 

ஐஎஸ்ஏ கைதுகளுக்கும் இவர் பொறுப்பல்ல

ஒபரேசன் லாலாங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே அதற்குக்கூட பொறுப்பேற்க மகாதிர் தயாராக இல்லை.1987-இல் அந்நடவடிக்கையில் 106 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதைச் செய்தது போலீஸ்தான் என்று அவர்களை அதற்குப் பொறுப்பாக்கினார். 

“நான் வேறுவிதமாக நடந்துகொண்டிருப்பேன்…போலீசார்தான் இப்படிச் செய்வது அவசியம் என்றார்கள்…”, என்று கூறி அவ்விவகாரத்தில் தமக்குப் பொறுப்பில்லை என்று கைகழுவி விட்டார்.

ஆனால், 106 பேரில் 40 பேரை ஈராண்டுகள்வரை தடுத்துவைக்கும் உத்தரவில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் கையொப்பமிட்டவர் மகாதிர்தானே? அல்லது போலீசார் அவரது கையை முறுக்கி அப்படிச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்களா?

“மாற்றரசுக் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று உறுதி கூறினேன்”, என்று கூட அவர் சொன்னதாகத் தெரிகிறது.

ஆனால், அந்த 40பேரில் ஒருவரான லிம் கிட் சியாங்(வலம்) தாம் மகாதிரைச் சந்திக்கவே இல்லை என்கிறார். இதற்கு மகாதிர் என்ன சொல்கிறார்? 

அதைப் பற்றி அவரிடம் கேட்காமல் இருப்பதே நல்லது.அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்.லிம்மைக்கூட குறை சொன்னாலும் சொல்வார்.

சொல்லப்போனால், எதைப் பற்றியும் மகாதிரிடம் கேட்பது நல்லதல்ல.அவருக்கு  ஊடகங்களில் இடமளிப்பதுகூட நல்லதல்ல. உருப்படியாக பேசினால் அல்லது தம் தவறுகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே அவரது பேச்சுக்கு இடமளிக்க வேண்டும். ஆனால், எதை ஒப்புக்கொள்வார்?அவர்தான் தவறே செய்யாத ஆளாயிற்றே!

ஆக, மலை நொறுங்கி விழப் போவதில்லை.அப்படி அது விழுந்து நொறுங்கினால் உலகம் அழிந்து போகும்-மகாதிரின் உலகம்.

============================================================================

KEE THUAN CHYE:   ‘No More Bullshit, Please, We’re All Malaysians’-என்ற நூலின் எழுத்தாளர்

TAGS: