நீதி கேட்டு ஐ.நா மன்றத்திற்கு முன் ஓங்கி ஒலித்த மக்கள் குரல்!

நேற்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு முன்பாக அலையெனத் திரண்ட மக்கள் ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை தாங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தியவறு ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்கக் கோரி ஓங்கிக் குரல் எழுப்பினர்.

அத்துடன், தமிழீன அழிப்பினை மேற்கொண்ட சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே, ஆகியோரின் உருவப் படங்களையும் கைகளில் ஏந்தி கோசங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

இவ்வார்ப்பாட்டத்தில் வழமைக்கு மாறாக தமிழர்கள் அல்லாதோர் அதிகளவில் கலந்துகொண்டு இலங்கையில் இம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து உரையாற்றியிருந்தனர். அத்தோடு தொடர்ந்தும், தமிழர்கள் ஜனநாயக முறையில் அனைத்துலக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பெல்ஜியத்தில் இருந்து 30 நாள் தொடர் பயணத்தின் இறுதியாக நேற்று ஐ.நா முன்றலை வந்தடைந்தவர்களை வரவேற்று தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், முதலில் தமிழர்களின் விடுதலை வாழ்விற்காக ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் தம்முயிரை தீக்கிரையாக்கிய 20 தியாகப் போராளிகளுக்கும் தீபம் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் இன்றைய காலத்தின் தேவை அறிந்து அனைத்துலகத்திடம் நீதிகேட்டு ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டியதன் தேவையை உணர்ந்து இன வேறுபாடுகளின்றி பல்லிண மக்களும் மனித உரிமை ஆர்வாளர்களும் கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.