இந்திய கடற்படை கப்பலை வழிமறித்த சீனப் போர்க் கப்பல்

வியட்னாம் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது.

தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் நாடுகள் தங்களுக்கும் அதில் உரிமை உள்ளது என வாதாடி வருகின்றன.

அரிய கடல் வளம் நிறைந்த இப்பகுதியில் சீனா தனது கடற்படை கப்பல்களை ரோந்து விடுவதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தொடர்ந்து முயல்கிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் வியட்னாம் துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐ.என்.எஸ். – ஐராவத்’ என்ற கடற்படை கப்பல் நட்பு ரீதியில் பயணம் மேற்கொண்டது.

கடந்த ஜூலை 22-ம் தேதி வியட்னாமின் ‘நாட்ராங்’ துறைமுகத்தில் இருந்து ‘ஹை போங்’ துறைமுகத்திற்கு ‘ஐராவத்’ சென்றது. அப்போது வழியில் அடையாளம் தெரியாத சீனப் போர்க் கப்பல் ஒன்று, ‘ஐராவத்’தை வழி மறித்ததாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும் ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், ‘ஐராவத்’ வியட்னாமுக்கு வந்ததை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஒப்புக் கொண்டதாகவும் நடந்த சம்பவம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லையென அந்த அமைச்சகம் கூறியதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.

TAGS: