இந்தியாவில் 4 மாநிலங்களில் மண்ணைக் கவ்வியது காங்கிரஸ்

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் மண்ணைக் கவ்வியுள்ளது காங்கிரஸ். அரசியல் செல்வாக்கை இழந்து விட்டதாகக் கூறப்பட்ட முலாயம் சிங் யாதவ், உ.பி., மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். பெரும் ஊழல், ஆடம்பரங்களால் மக்கள் செல்வாக்கை இழந்த மாயாவதி, ஆட்சியைப் பறிகொடுத்துள்ளார்.

உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதுமே, நாடு முழுவதும், பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிலும், 403 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியதும், வருங்காலத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை முடிவு செய்வதில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலமுமான உ.பி.,யில் தேர்தல் நடப்பது, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

உ.பி.,யின் சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு, அங்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஐந்து மாநிலங்களிலுமே, பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாக தேர்தல்கள் முடிவடைந்தன. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், மணிப்பூரை தவிர, மற்ற நான்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. உ.பி.,யில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் நோக்கத்துடன் பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, நான்காவது இடமே கிடைத்துள்ளது. கருத்துக் கணிப்புகளில், பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால், அங்கும் காங்கிரசின் ஜாலம் பலிக்கவில்லை.

சிரோன்மணி அகாலி தளம் – பா.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அமரீந்தர் சிங் முதல்வர் என்று அறிவித்து, அவர் தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி, படு தோல்வி அடைந்துள்ளது.கோவாவில், காங்கிரஸ் கட்சி தான் தற்போது ஆளும் கட்சி.

TAGS: