ராஜபக்சே மீது முதல்வர் ஜெயலலிதா கடும் தாக்கு

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே பேட்டியளித்திருப்பதாகவும், அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், இலங்கையில், சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வரை தனது அரசு ஓயாது என்றும் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான புகார்கள் குறித்தும், அதுதொடர்பாக ஐ.நா பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் விவாதம் நடத்தப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், தமிழ் மக்களுக்கு மீண்டும் முழு அளவில் மறுவாழ்வும், சம உரிமைகளுக்கும் கிடைக்கும் வரை இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், கச்சத் தீவு தொடர்பாகவும் அத் தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகள் என அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, சமீபத்தில் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோத்தபய ராஜபக்சே, அந்தத் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார்.

அந்தப் பிரச்னை, வியாழக்கிழமையன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அதுதொடர்பான கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது ஜெயலலிதா பேசும்போது, கோத்தபயவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

“அந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”  என ஜெயலலிதா குறிப்பிட்டார்.

சிங்களர், தமிழர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் கோத்தபய ராஜபக்சே கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என ஜெலலலிதா விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபக்சேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“கோத்தபய ராஜபக்சேவின் பேட்டியிலிருந்தே, இலங்கை இராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், அது தொடர்பான அணைத்துலக விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை அனைத்துலக நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது” என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைப் பிரச்சினையில், அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு என்ற அறிவிப்பு, இறுதி எச்சரிக்கை என பல்வேறு வகையான கண்துடைப்பு நாடகங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்தியதாகவும், அப்போதெல்லாம் வாய் திறக்காத கோத்தபய இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்திருப்பது, அந்தத் தீர்மானத்துக்கு தாக்கம் இருப்பதையே காட்டுகிறது என ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்குக் கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.