ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றமல்ல என ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நினைத்ததாக இந்தியாவின் முன்னாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.
ரகோத்தமன் இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர்.
ராஜீவ் கொலை வழக்கு பற்றி அவர் கூறுவதாவது;
“நாங்கள் குற்றவாளிகளின் இடங்களை சோதனையிட்டபோது ஆயிரக்கணக்கான சான்றுகளையும் சத்தியக் கடதாசிகளையும் கண்டு பிடித்தோம். அவை அனைத்தும் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய இராணுவம் தமிழீழத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களை காட்டின.
கற்பழிப்பு, கொலை, கொள்ளை ஆகியவற்றை செய்த இந்திய அமைதிப் படையினரின் குற்றங்களை நிரூபிப்பதற்கான சான்றுகளே அவை அனைத்தும். அடுத்ததாக தம் உயிரையே அர்ப்பணித்து செயற்படக்கூடியவர்கள் விடுதலைப்புலிகள்தான்” என்கின்றார் ரகோத்தமன்.
“ஆகவே ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கான 100 சதவீத காரணம் புலிகளுக்கே உள்ளன என நாங்கள் கருதினோம். ராஜீவ் கொலையினை அவர்களே செய்தார்கள் என்றாலும் அது ஒரு குற்றம் இல்லை என அவர்கள் நினைக்கின்றார்கள் மாறாக அது ஒரு தண்டனை வழங்கலே என இப்போதும் நினைப்பதாக புலனாய்வு அதிகாரி ரகொத்தமன் கூறுகின்றார்.
தான் முதன் முதலில் முருகனை சந்தித்தபோது அவர் தன்னை மிருகங்கள் போல் சித்திரவதை செய்யவேண்டாம் தாம் கிரிமினல்கள் அல்ல. தாம் போராளிகள் என கூறியதாக ரகோத்தமன் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் இவர் கூறும் கூற்றிலிருந்து வெளிப்படும் உண்மை என்னவென்றால் ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்த இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆரம்பமே; அதனை செய்தது புலிகள்தான் என்று தீர்மானித்துவிட்டு அதில் இருந்தே விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான்.