பிரதமர்: லினாஸ் பிஎஸ்சி-யில் பக்காத்தான் ஈடுபாடு தேவை

லினாஸ் அரிய மண் தொழிற்சாலை மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்ற தேர்வுக் குழுவை பக்காத்தான் ராக்யாட் புறக்கணித்திருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

அந்தப் பிரச்னைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வு தேவைப்படுகிறது. அது பொது மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதனை எல்லாத் தரப்புக்களும் கையாள வேண்டும் என அவர் சொன்னார்.

புத்ராஜெயாவில் நிருபர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் ஏன் பிஎஸ்சி-யை எதிர்க்கின்றன என்பது தமக்குப் புரியவில்லை என்றார்.

“இந்த நாட்டில் இரு கட்சி அடிப்படையில் கையாளப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. இதில் அரசியல் என்ற கேள்வியே எழவில்லை. அது நாடு மற்றும் மக்கள் நலன்கள் சம்பந்தப்பட்டதாகும்,” என அவர் சொன்னதாக பெர்னாமா தகவல் கூறியது.

.நேற்று பிஎஸ்சி அமைக்கப்படுவதற்கு வகை செய்யும் தீர்மானத்துக்கு எதிராக பக்காத்தான் எம்பி-க்கள் வாக்களித்த பின்னர் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

மே முதல் தேதி குறைந்த பட்ச சம்பளம் அறிவிக்கப்படும் ?

இதனிடையே தமது நிர்வாகத்தின் குறைந்த பட்ச சம்பளக் கொள்கை மீது நஜிப் மே முதல் தேதி தொழிலாளர் தினத்தன்று அறிக்கை வெளியிடக் கூடும் என்ற தகவலையும் பெர்னாமா வெளியிட்டுள்ளது.

அந்தக் கொள்கை இறுதி வடிவம் பெற்று வருகிறது என்றும் அது இந்த மாதம் வெளியிடப்படும் என்றும் மனித வள அமைச்சர் பிப்ரவரி மாத இறுதியில் கூறியிருந்தார்.

நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களில் மாதம் ஒன்றுக்கு 900 ரிங்கிட்டுக்கும் குறைவாக ஊதியத்தைப் பெறும் 30 விழுக்காட்டினர் அந்தக் கொள்கை வழி நன்மை அடைவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும் குறைந்த பட்சச் சம்பளக் கொள்கை வர்த்தகங்களைப் பாதிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தயாரிப்புத் துறை எச்சரித்துள்ளது.

எடுத்துக்காட்டுக்கு பிளாஸ்டிக் தொழில் துறை தன்னிடம் உள்ள 86,000 தொழிலாளர்களில் 20 விழுக்காட்டினரை ஆட்குறைப்புச் செய்ய வேண்டியிருக்கும் என  ஆரூடம் கூறியுள்ளது.

TAGS: