பிஎஸ்சி, லினாஸுக்காக காலத்தைக் கடத்தும் தந்திரம் என்கிறார் பூஸியா

700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தின் பாதுகாப்பு மீது அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு, அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்தத் தொழில் கூடம் பற்றிய குறைகூறல்களைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என குவாந்தான் எம்பி பூஸியா சாலே கூறுகின்றார்.

அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டு ஆட்சிக்குத் திரும்பினால் அவர் சர்ச்சைக்கு இலக்காகியுள்ள அந்தத் திட்டத்தை மக்கள் விருப்பத்திற்கு மாறாக நிறைவேற்றுவதற்கு அனுமதி அளித்து விடுவார் என அவர் எச்சரித்தார்.

“அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர் அதிகாரத்துக்கு திரும்பியதும் தாம் எதிர்நோக்கிய எல்லா எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் லினாஸ் இயங்குவதற்கு அனுமதி கொடுத்து விடுவார்,” என பூஸியா இன்று விடுத்த அறிக்கை கூறியது.

லினாஸுக்காக காலத்தைக் கடத்துவதை அரசாங்கம் வலியுறுத்துவது எதிர்காலத்தில் அந்தத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான எந்த எதிர்கால முயற்சிக்கும் இடையூறாக இருக்கும். ஏனெனில் இழப்பீட்டுச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

பல பிரபலமான வழக்குகளில் தாமதப்படுத்தும் தந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அப்போது பொது மக்களுடைய ஆத்திரத்தைத் தணிப்பதற்காக விசாரணை ஆணையங்களும் வழக்கு விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளன. இறுதியில் அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படுவதற்கு எந்தத் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பூஸியா மேலும் கூறினார்.

TAGS: