ஜோகூர் பாருவில் ‘கிறிஸ்துவ மருட்டல்’ கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தவர்கள், அந்த நிகழ்வுக்கான தலைப்பிலிருந்து சர்ச்சைக்குரிய அந்த இரண்டு சொற்களையும் நீக்கியுள்ளனர்.
புதிய தலைப்பு “Liberalisme, Pluralisme dan Gejala Murtad: Apa Peranan Guru Di Dalam Mepertahankan Akidah” (தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் மதம் மாற்றமும்: சமயத்தை பாதுகாப்பதில் ஆசிரியர் பங்கு என்ன?) என்பதாகும்.
அந்தத் தகவலை ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் மௌலிசான் பூஜாங் வெளியிட்டார்.
“Pemantapan Aqidah, Bahaya Liberalisme dan Pluralism Serta Ancaman Kristianisasi Terhadap Umat Islam. Apa Peranan Guru?” (“சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது, தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் கொண்டுள்ள அபாயங்கள், முஸ்லிம்களை கிறிஸ்துவ மயமாக்கும் மருட்டல். ஆசிரியர்களுடைய பங்கு என்ன?” என்பது அந்தக் கருத்தரங்கின் பழைய தலைப்பாகும்.
ஜோகூர் முப்தி துறையும் ஜோகூர் கல்வித் துறையும் கூட்டாக அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
நாளை சனிக்கிழமை தொடங்கும் அதில் மாநிலம் முழுவதையும் சார்ந்த 300 சமய ஆசிரியர்கள் பங்கு கொள்கின்றனர்.
“முஸ்லிம்களிடையே சமய நம்பிக்கையை வலுப்படுத்துவதே அந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும். அந்தக் கருத்தரங்கு மற்ற சமயங்களுக்கு மருட்டலானது எனக் கூறி யாரும் அதனை அரசியல் மயமாக்கக் கூடாது,” என்றும் மௌலிசான் வலியுறுத்தினார்.
மலாய் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி தன்னை ஆதரிக்குமாறு செய்வதற்கு அம்னோ மேற்கொள்ளும் இன்னொரு முயற்சி அது எனத் தெரிவித்துள்ள பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமையும் அவர் சாடினார்.
அந்தக் குற்றச்சாட்டு தேவையற்றது. அன்வாருடைய குறுகிய எண்ணங்களைக் காட்டுகிறது என மௌலிசான் சொன்னார்.
பெர்னாமா