உதயகுமாருக்கு மக்கள் கூட்டணி தொகுதி கொடுக்க வேண்டும்!

இந்தியர்கள் அதிக வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியை உதயகுமாருக்கு கொடுத்து மக்கள் கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

சமூக இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மனித உரிமை கட்சியின் தலைவரும், இண்ட்ராப் அமைப்பின் தலைவராகவும் உள்ள உதயகுமார் தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? என்ற செம்பருத்தியின் கேள்விக்கு பதில் அளிக்கையில், “தார்மீக அடிப்படையில் உதயகுமாரின் மீது நான் கொண்டுள்ள மதிப்பு, அவரின் பிடிவாதக் குறை சொல்லும் தன்மைக்கு அப்பாற்பட்டது. எனது ஆதரவு அவருக்கு உண்டு” என்றார்.

உதயகுமார் வெற்றிபெற வேண்டுமானால், அவர் மக்கள் கூட்டணி வேட்பாளராக நிற்பதுதான் நல்லது. வெற்றி பெறுவதற்கு இந்தியர்கள் வாக்குகள் மட்டும் போதாது.

இனவாத தன்மை கொண்ட வகையில் தனது நடவடிக்கைகளை கொண்டுள்ள பெர்காசா தலைவர் இப்ராஹிம் அலி, தேர்தலில் நின்றால் அவருக்கு வலது சாரி எண்ணம் கொண்ட அனைத்து மலாய்காரர்களும் வாக்களிப்பார்கள். அதேவேளை சீனர்களும் இந்தியர்களும் புறக்கணிக்கக்கூடும்.

“எனக்குத் தெரியும் உதயகுமாரின் வாதம் முழுமையாக இனவாதமற்றது. அது இனவாதத்திற்கு எதிரானது. ஆனால், தேர்தல் அரசியல் பிரச்சாரம் மாறுபட்டது. அது பொய்யை உண்மையாக்கும், உண்மையை பொய்யாக்கும்” என்றவர், உதயகுமார் அரசியல் வியூக அடிப்படையில் இந்நாட்டில் உள்ள இந்தியர்களின் ஏமாற்றத்திற்கும் ஏக்கங்களுக்கும் ஒரு வடிவம் கொடுத்தவர் என்கிறார் ஆறுமுகம்.

உதயகுமாரின் குழுவினர் பல இடங்களில் தேர்தலில் நிற்க திட்டமிட்டதைப் பற்றி கருத்து கேட்டபோது, “அது போன்ற நடவடிக்கை முதிர்சியற்றது. அந்நிலைக்கு உருவாக மற்ற இனங்களின் ஆதரவு தேவைப்படும். மேலும், இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்” என்றார்.”