பாஹ்ரோல்ராஸி, இஸ்மாயில் ஆகியோர் கெடா ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

கெடா மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பாஹ்ரோல்ராஸி ஸாவாவியும் டாக்டர் இஸ்மாயில் சாலே-யும் இன்று கெடா அரசப் பேராளர் மன்றத் தலைவர் துங்கு அனுவார் சுல்தான் பாட்லிஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அந்தச் சடங்கு அலோர் ஸ்டாரில் உள்ள இஸ்தானா அனாக் புக்கிட்-டில் இன்று நடைபெற்றது.

அந்த இருவரும் தங்களது மறு நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால் அவர்கள், மற்ற எட்டு ஆட்சி மன்ற உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட போது பதவி ஏற்கவில்லை.

தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்கின் போக்கு பிடிக்காததால் மறு நியமனத்தை நிராகரித்ததாக அவர்கள் கூறினர்.

முகமட் தாவ்லான்மாட் ராசூல், அமிருடின் ஹம்சா, டாக்டர் ஹம்டான் முகமட் காலிப், சித்தி ஆஷா கசாலி, எஸ் மணிக்குமார், லிம் சூநீ, அப்துல் கனி அகமட், தான் ஜுன் லோங் என்ற தான் சாவ் காங், ஆகியோர் மற்ற எட்டு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் ஆவர்.

மறு நியமனம் செய்யப்பட்டு அந்த இரண்டு ஆட்சி மன்ற உறுப்பினர்களும் மற்றவர்களும் இணைந்து பாடுபட்டு மாநில நிர்வாகத்தை மேலும் மேன்மைக்குக் கொண்டு செல்வர் எனத் தாம் நம்புவதாக அஜிஸான் பதை ஏற்புச் சடங்கிற்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“பாஹ்ரோல்ராஸியும் இஸ்மாயிலும் மீண்டும் எங்களுடன் சேர்ந்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிரேன். எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து கொள்வோம். கடந்த காலத்தில் பாதகமாகத் தோன்றிய எல்லா அம்சங்களும் இப்போது சாதகமாகி விட்டன்,” என்றார் அவர்.

பெர்னாமா

TAGS: