2011ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றி இடையூறுகள் எதனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் பெர்சே 3.0 நடத்தப்படுவதற்கு உள் துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
“அரசாங்கம் அவர்களுடைய திட்டங்களை பாதுகாப்பு விவகாரமாகக் கருதவில்லை. அமைதியாக ஒன்று கூடும் சட்ட உணர்வின் அடிப்படையில் சட்டங்கள் ஏதும் மீறப்படாத வரையில் அவர்கள் ஒன்று கூடுவதை நாங்கள் தடுக்க மாட்டோம்.”
“அவர்கள் ஒன்று கூடலாம். ஆனால் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம். பொது ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டாம்,” என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
பெர்சே 3.0 ஏற்பாட்டாளர்கள் தாங்கள் குந்தியிருப்பு ஆட்சேபத்துக்கு மெர்தேக்கா சதுக்கத்தைப் பயன்படுத்த எண்ணியிருப்பது பற்றி அவரிடம் இரண்டு முறை வினவப்பட்டது.
அதற்கு ஹிஷாமுடின் நேரடியான பதிலை வழங்கவில்லை.
“போலீசாரிடம் பேசுங்கள். பொது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தாத மேலும் பொருத்தமான இடத்தை கண்டு பிடியுங்கள்,” என்றார் ஹிஷாமுடின்.