“எங்களை மீண்டும் சுற்றலில் விட வேண்டாம்”

கடந்த ஆண்டு ஜலை மாதம் 9ம் தேதி தான் நடத்திய மாபெரும் பேரணிக்கு முன்னதாக தங்களை சுற்றலில் விட்டதைப் போல அதிகாரிகள் இந்த முறை செய்ய மாட்டார்கள் என பெர்சே 2.0 கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.

ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்து அந்தப் பேரணியை மெர்தேக்கா சதுக்கத்தில் நடத்துவதற்கு அனுமதியைப் பெறுமாறு ஆலோசனை கூறியுள்ளதை அந்த கூட்டமைப்பு எச்சரிக்கையுடன் நோக்குவதே அதற்குக் காரணம் என அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.

“கடந்த ஆண்டு எங்களை சுற்றலில் விட்ட அதே நிலையின் மறு பதிப்பாக இது இருக்காது என நான் நம்புகிறேன்,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது அம்பிகா சொன்னார்.

‘மேலும் பொருத்தமான இடம்’ தேர்வு செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நேற்று யோசனை கூறியிருந்தார்.

அந்தப் பேரணி நடைபெறலாம் ஆனால் ஏற்பட்டாளர்கள் மெர்தேக்கா சதுக்க உரிமையாளரிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என சட்டத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸும் அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் மெர்தேக்கா சதுக்கத்தைப் பராமரித்து வருகிறது.

பெர்சே மாநகராட்சி மன்றத்துக்குத் தெரிவிக்கும்

அந்தப் பேரணிக்கு கூட்டரசு அரசாங்கம் பச்சை விளக்குக் காட்டியிருப்பதால் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடம் அனுமதி கேட்பது வெறும் நடைமுறைதான் என அம்பிகா சொன்னார்.

விரைவில் பெர்சே நடவடிக்கைக் குழு அந்தப் பேரணி பற்றி மாநகராட்சி மன்றத்துக்குத் தகவல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் பேரணியை அரங்கம் ஒன்றில் நடத்துமாறு அரசாங்கம் பெர்சே 2.0ஐ கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்காக எந்த அரங்கத்தையும் அது தராததோடு அந்த வாக்குறுதியிலிருந்தும் பின் வாங்கியது. கோலாலம்பூருக்கு வெளியில் பேரணியை நடத்துமாறும் அது கூட்டமைப்பைக் கேட்டுக் கொண்டது.

மெர்தேக்கா அரங்கத்தில் பேரணியை நடத்துவதில் பெர்சே அப்போது பிடிவாதமாக இருந்தது. ஆனால் அந்த இடம் மூடப்பட்டது. அதனால் 15,000-க்கும் மேற்பட்ட அதன் ஆதரவாளர்கள் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து அமைதியைச் சீர்குலைத்ததற்காகவும் சட்ட விரோதமாகக் கூடியதற்காகவும் 16 பிள்ளைகள் உட்பட 1,667 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் முறையை முழுமையாக சீரமைப்பது உட்பட முக்கிய பிரச்னைகளுக்கு தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தீர்வுகளை வழங்கத் தவறியதைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி ஆட்சேபத்துக்கு பெர்சே ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் சீர்திருத்தங்களை நாடி அது நடத்தும் மூன்றாவது பேரணி இதுவாகும்.

மெர்தேக்கா சதுக்கத்தில் பேரணியை நடத்துவதில் பெர்சே உறுதியாக உள்ளது.