தெங்கு அட்னான்: பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியல்கள் அம்னோவுக்குக் கிடைத்துள்ளன

அம்னோவின் வேட்பாளர் பட்டியல்கள் அனைத்தும் அம்னோ தலைமையகத்துக்குக் கிடைத்துள்ளன. அந்தத் தகவலை அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் வெளியிட்டார்.

காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 2ம் தேதிக்குள் அனைத்து தொகுதிகளிடமிருந்தும் அந்தப் பட்டியல் கிடைத்து விட்டதாக அவர் சொன்னார்.

“என்றாலும் அம்னோ தலைமைத்துவத்திற்குச் சமர்பிக்கப்பட்ட  அந்த வேட்பாளர் பட்டியல்கள் இறுதியானவை அல்ல,” என அவர்  சொன்னார்.

நேற்று தஞ்சோங் காராங்கில் பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பிஎன் உறுப்புக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியல்களைச் சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிஎன் தலைமைச் செயலாளருமான தெங்கு அட்னான் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அந்த நிகழ்வில் பேசிய தெங்கு அட்னான், அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் வீசுகின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முறியடிக்குமாறும் தாக்கிப் பேசும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரத்தைக் கேட்டுக் கொண்டார்.

-பெர்னாமா