ராஜபக்சே மற்றும் பாலஸ்தீன தலைவருக்குமிடையே விசேட சந்திப்பு

இரண்டு நாள் அதிகாரப்பூர்வமாக பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள பாலஸ்தீன குடியரசுத் தலைவருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சேக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது..

நேற்றிரவு இலங்கை வானூர்தி நிலையத்தை சென்றடைந்த பலஸ்தீனத் தலைவர் முஹமட் அப்பாஸ் மற்றும்  அந்நாட்டு முக்கியஸ்தர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் அதாவுத செனவிரட்ன உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வரவேற்றனர்.

பாலஸ்தீனத் தலைவர் இன்று இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் இலங்கை நேரப்படி இன்று மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ள கூட்டு ஊடகச் சந்திப்பொன்றிலும் அப்பாஸ் கலந்து கொள்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலஸ்தீன தலைவருக்கு இன்று முற்பகல் இலங்கை இராணுவத்தினர் விசேட மரியாதை அணி வகுப்பு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

2009-ஆம் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் இவ்விரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: