தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; பின்னணியில் அரசியல்வாதி

இலங்கையின் தெற்கே காலி – திலிதுற தோட்டத்தில் புத்தாண்டு நாளன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகளோடு வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து வீடுகளை தீவைத்து எரித்துவிட்டு, இன்னும் பல வீடுகளை தாக்கிச் தேப்படுத்திச் சென்றுவிட்டதாகவும் பிதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து தமது பாதுகாப்புத் தொடர்பில் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் அப்பகுதி அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

தனிப்பட்ட ரீதியில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

TAGS: