அம்பிகா: கடைசி நேரத்தில் மாற்று இடம் ஏன்?

திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டம் தொடங்க இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கையில், கடைசி நேரத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேல்) வழங்க முன்வந்துள்ள மெர்தேக்கா அரங்கத்தை ஏற்றுக்கொள்ள தேர்தல் சீர்திருத்தம் கோரும் குழுவான பெர்சே மறுத்து விட்டது.

எதிர்வரும் சனிக்கிழமை பெர்சே பேரணி டத்தாரான் மெர்தேக்காவில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது டிபிகேல்லுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கையில் மாற்று இடம் அளிக்க விரும்பும் அதன் நோக்கத்தை முன்னரே அறிவித்திருக்கலாம் என்று பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசன் மலேசியாகியிடம் கூறினார்.

“ஏப்ரல் 19 இல் அவர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பதில் “இல்லை” என்பதுதான். மாற்று இடம் குறித்து எதுவும் அதில் இல்லை”, என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஏப்ரல் 19 இல்தான் அதிகாரப்பூர்வமாக டிபிகேஎல்லுக்குத் தெரிவித்திருந்தாலும், ஏப்ரல் 4 இல் அறிவிப்பு செய்த நாளிலிருந்து தங்களுடைய நோக்கம் பரவலாக தெரிந்ததே என்று அம்பிகா விளக்கம் அளித்தார்.

கேஎல் மேயர் அஹமட் புவாட் மெர்தேக்கா அரங்கம் அளிக்கப்படும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தால், பெர்சே அதை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கும்.

“புவாட் அதிகார வர்க்க பிடியில் சிக்கிக் கொண்டது வருத்தத்திற்குரியது, இல்லையென்றால் இதற்குத் தீர்வு கண்டிருக்கலாம்”, என்றாரவர்.