பெர்சே 3.0ஐ நியாயப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத் திருத்தங்கள் மட்டுமே போதும், அம்பிகா ஸ்ரீனிவாசன்

‘நான் தேர்தல் முகவர்களை அகற்றுவதற்கு வாக்களித்தேன் என்கிறார் கைரி’ என்ற மலேசியாகினி செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புதன்கிழமை நடைபெற்ற எங்கள் விவாதத்திற்குப் பின்னர் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் அவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றம் ஏப்ரல் 19ம் தேதி நிறைவேற்றிய 2012ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் (திருத்த) மசோதா பற்றி கைரி மேலும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

விவாதத்தில் பேசப்படாத ஆனால் பத்திரிக்கை அறிக்கையில் கைரி குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பற்றி நான் கருத்துக் கூற விரும்புகிறேன்.

வாக்குச் சாவடிகளிலிருந்து தேர்தல் முகவர்களை தடுத்து நிறுத்தும் அந்தத் திருத்தங்கள் ஏற்படுத்தக் கூடிய நீண்ட கால விளவுகளை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆவி வாக்காளர்கள், சட்ட விரோத வாக்காளர்கள் ஆகியோரை கண்டு பிடிப்பதற்கு உள்ள ஒரே ஒரு திறமையான சோதனை முறையை அந்தத் திருத்தம் அகற்றுகிறது.

வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்களிப்பு வழிகள் வழியாகச் செல்லும் வாக்காளர்கள் தொடர்பில் சந்தேகத்துக்குரிய எதனையும் வேட்பாளர்களுடைய முகவர்கள் கண்டு பிடிக்க முடியும்.

சந்தேகத்துக்குரிய வாக்காளர்களுடைய அடையாளக் கார்டுகளை முகவர்கள் சோதிக்க முடியும். ஒரு வாக்காளரை அந்த முகவர்கள் நேரடியாக உறுதி செய்ய முடியும்.

ஆகவே தேர்தல் நடைமுறைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தமது முகவர்களை வாக்குச் சாவடிகளுக்குள் வைத்திருப்பதற்கான உரிமையை வேட்பாளர்கள் பெற்றிருப்பது மிக முக்கியமாகும்.

முறையான கலந்தாலோசனைகள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் கடைசி நாளன்று அவசரம் அவசரமாக அந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.

அந்தத் திருத்தங்களுக்கு அடிப்படையாக அந்தத் தேர்தல் முகவர்கள் உருவாக்கக் கூடும் எனக் கருதப்படும் விஷயங்கள் என்ன என தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு ஆதாரங்கள் ஏதும் நாடாளுமன்றத்தில் தரப்படவில்லை.

அந்த மாற்றங்கள் குறித்து ஏன் இசி, பிஎஸ்சி-யிடம் தெரிவிக்கவில்லை?

இசி என்ற தேர்தல் ஆணையம் தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் 26ஏ பிரிவைத் திருத்துவதற்கான தனது யோசனைகள் பற்றி ஏன் பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் தெரிவிக்கவில்லை என்ற இன்னொரு கேள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.

அவற்றுக்கு முகவர்களுடன் பிரச்னை இருந்தால் அதனை பற்றி தேர்தல் ஆணையம் பேசுவதற்கு சிறந்த இடம் நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஆகும்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடருகின்றன. அவற்றுக்குப் பதிலும் இல்லை. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்படவில்லை. அத்துடன் அந்தத் திருத்தங்கள் வெகு வேகமாக நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அத்தகையப் பின்னணியில் தேர்தல் மோசடிகள் குறித்த சந்தேகங்களே அதிகரிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் நேர்மை, சுதந்திரம் மீது பொது மக்களுடைய நம்பிக்கை குறைந்துள்ளது.

அந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட விதம் மட்டுமே பெர்சே 3.0ஐ நடத்துவதற்குப் போதுமான காரணத்தை வழங்குகிறது.