பெர்சே 3.0-இல் சம்பந்தப்பட்டதற்காக இன்றிரவு மணி 7.20 வரையில் மொத்தம் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையை போலீசார் தங்களது முகநூல் பக்கத்தின் வழி வெளியிட்டுள்ளனர்.
பிற்பகல் மணி 2.55 வரியில் பேரணி கட்டுக்குள் இருந்ததாக இன்று மாலை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே வெளியிட்ட அறிக்கை கூறியது.
பிற்பகல் மணி 2.50 வாக்கில் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசு சாரா அமைப்புக்களின் தலைவர்களும் கூட்டத்தினரிடையே பேசினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்குப் பின்னர் டத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போலீஸ் அமைத்திருந்த வேலியில் ஜாலான் துன் பேராக்-ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலைச் சந்திப்பில் போடப்பட்டிருந்த வேலியை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறினர்.
டத்தாரான் மெர்தேக்காவுக்குள் நுழையக் கூடாது என்ற நீதிமன்ற ஆணையை அமலாக்கும் பொருட்டு தமது வீரர்கள் குற்றவியல் சட்டத்தின் 98-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலக்கானதாக முகமட் மேலும் கூறினார்.
“அவர்கள் போலீசார் மீது எல்லா விதமான பொருட்களையும் வீசினர். டத்தாரான் மெர்தேக்கா பாதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியை உடைத்தனர்.”
அந்தக் கும்பலை வெளியேற்றுவதற்குப் போலீசார் நீர் பாய்ச்சும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்றார் அவர்.
அந்த நடவடிக்கை பலனளிக்காமல் போகவே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தப் பேரணி பெரிய வெற்றி என்றும் அதில் பங்கு கொண்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர் என்றும் பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதற்கு முகமட் பதில் அளித்தார்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லத் தயங்கி அந்தப் பேரணி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ‘டத்தாரான், டத்தாரான்’ என முழங்கினர்.
அதற்குச் சில நிமிடங்களில் வேலி உடைக்கப்பட்டதுடன் குழப்பம் மூண்டது. அதன்பின்னர் நான்கு மணி நேரத்துக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் நிகழ்ந்தது.