பாஸ் இளைஞர் பிரிவு: போலீசாருக்கு உயர்நிலையிலிருந்து ஒப்புதல் வந்திருக்க வேண்டும்

பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் நடந்து கொண்ட “தொழில் முறைக்கு மாறான” “வன்முறையான” நடத்தைக்கு அம்னோவும் பிஎன்-னும் பொறுப்பேற்க வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது.

“கோலாலம்பூரைச் சுற்றிலும் நேற்று நிகழ்ந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கையாளும் போது போலீசார் காட்டிய வன்முறையையும் எடுத்த மித மிஞ்சிய நடவடிக்கையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என சிலாங்கூர் பாஸ் இளைஞர் தலைவர் ஹாஸ்புல்லா முகமட் ரிட்சுவான் விடுத்த அறிக்கை கூறியது.

“அரச மலேசியப் போலீஸ் படையின் தொழில் முறைக்கு மாறான நடத்தைக்கும் வன்முறைக்கும் அம்னோவும் பிஎன்-னும் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் அவர்.

“உயர் நிலையின் அனுமதியும் ஆசீர்வாதமும் இல்லாமல் அவர்கள் செயல்பட்டிருக்க முடியாது என்பதால் நேற்றைய போலீஸ் வன்முறைக்கான பொறுப்பை அம்னோ பிஎன் தட்டிக்கழிக்க முடியாது.”

அமைதியாக இயங்கிய பங்கேற்பாளர்களை போலீஸ் தாக்குவதைக் காட்டும் வீடியோ, பட ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

நேற்று நடந்த சம்பவங்கள் பற்றி போலீசார் தொடர்ந்து பொய்களைக் கூறி வந்தால் அவற்றை அம்பலப்படுத்தப் போவதாக ஹாஸ்புல்லா மேலும் கூறினார்.

நேற்று காலை மணி 9.00 முதல் கூடத் தொடங்கிய பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் அந்த பேரணி தொடங்கிய மணி 2.30 வாக்கில் கிட்டத்தட்ட 100,000 பேர் டாத்தாரன் மெர்தேக்காவை சுற்றிலும் குவிந்தனர்.

அந்தப் பேரணி வெற்றி என பெர்சே ஏற்பாட்டாளர்கள் அறிவித்து கூட்டத்தினரைக் கலைந்து போகுமாறு கேட்டுக் கொள்ளும் வரையில் எல்லாம் அமைதியாகவும் கேளிக்கை விழாவைப் போன்றும் சூழ்நிலைகள் இருந்தன.

டாத்தாரானைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த தடுப்புக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்ததாக குற்றம் சாட்டிய பின்னர் பிற்பகல் 3.00 மணி வாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். நீரையும் பாய்ச்சினர்.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டிச் சென்ற போலீசார் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரைக் கைது செய்தனர்.

“அம்னோவும் பிஎன்-னும் தங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு போலீசார் இன்னும் தங்களை அனுமதிப்பது குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்,” என்றும் ஹாஸ்புல்லா தெரிவித்தார்.

TAGS: