ம.இ.கா இளைஞர் தரப்பினர் வன்செயலில் இறங்கியது கண்டித்தக்கது!

இந்திய சமூகத்தின் வருத்தங்களையும், பாதிப்புகளையும் நம்நாட்டின் பிரதமரிடம் எடுத்துக் கூறுவதற்கும் மனு வழங்குவதற்கும் சென்ற பி.கே.ஆர் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் அடங்கிய குழுமீது, ம.இ.கா இளைஞர் பிரிவின் பெயரில் வன்செயல் நிகழ்ந்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் ஜி. குமார் அம்மான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நமது சுதந்திர நாட்டில் குறைகளை எடுத்துச் சொல்வதற்கும், பிரதமர் உட்பட ஆட்சித் தலைவர்களிடம் மனு கொடுப்பதற்கும் நாம் கடந்த 55 ஆண்டுகளாக அனுபவித்து வருகிற ஜனநாயகம் அனுமதித்து வந்திருக்கிறது.

நேற்று காலை, பிரதமர் இலாகா வாசலில் ம.இ.கா இளைஞர் பிரிவினர், எதிர்க்கட்சியினரின் ஜனநாயக உரிமைக்கு மாசு உண்டாக்கும் வன்செயலில் ஈடுபட்டது, வருந்தக் தக்கது.

இந்திய சமூகத்தின் பிரச்னைகளை ம.இ.கா. தேசியத் தலைவர் ஜி.பழனிவேலு, தேசிய முன்னணியின் பார்வைக்கும் குறிப்பாகப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பார்வைக்கும் கொண்டு சென்று, பல நன்மைகளையும், இந்திய சமூகம் பலனடைய வைக்கிற பல திருப்பங்களையும் கண்டு கொண்டிருக்கிற இத்தருணத்தில் புத்ரா ஜெயாவில் பிரதமர் இலாகா வாசலில் வன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் ம.இ.கா.வினரின் செயலையும் நிச்சயம் மன்னிக்க முடியாது.

குறிப்பாக, பிரதமர் இலாகா வளாகத்தின் வாசலில் அத்தகைய வன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது, ஒட்டுமொத்தமாக ம.இ.காவுக்கே களங்கத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஜனநாயகத்திற்குச் சிறப்புக் கொடுப்பதே அதுகுறித்துப் பேசுகிற ஒவ்வொருவரும்  கடைப்பிடிக்க வேண்டிய கட்டொழுங்கே. நேற்று காலை நிகழ்ந்த வன்முறை சம்பவம், ம.இ.கா.வுக்கும் தேசிய முன்னணிக்கும் எந்த வகையிலும் நல்ல பெயரைத் தேடித்தராது.

அச்சம்பவத்துக்காக ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் என்ற முறையில் வருந்துகிறேன்; மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

அச்சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பிரச்னைகளுக்குத் தீர்வைக் காண்பதில் வன்முறை செயலில் ஈடுபடுதல், தேசிய முன்னணியின் கலாசாரமும் அல்ல. வன்செயலில் இறங்குவதற்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை. அனுமதியும் கிடையாது” என ஜி. குமாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: