நான்கு பக்காத்தான் தலைவர்களை சம்பந்தப்படுத்துவதாக கூறப்படும் “சூடான வீடியோக்கள்” விரைவில் அம்பலப்படுத்தப்படும் என அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோக்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என அந்த மலாய் நாளேடு கூறியது.
அந்த வீடியோக்களில் காணப்படுகின்றவர்கள், இரண்டு பிகேஆர் மூத்த தலைவர்களையும், பாஸ் கட்சித் தலைவர் ஒருவரையும் இன்னொருவர் டிஏபி-யை சேர்ந்தவரைப் போன்றும் தோற்றமளிப்பதாக அந்த ஏடு குறிப்பிட்டது.
அந்த ஏடு தனது செய்திக்கு ஆதரவாக ‘எதிர்த்தரப்புக்கு ஆதரவளிக்கும்’ suarapakatanrakyat.com என்னும் வலைப்பதிவில் அந்த ‘சூடான வீடியோக்கள்’ பற்றிய வதந்தி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உத்துசான் கூறியது.
இந்த வாரத் தொடக்கத்தில் ‘கழிப்பறை ஏற்பாடு’ எனக் கூறப்படும் விவகாரத்தில் ஜோடி ஒன்று காணப்படும் தோற்றங்களைக் கொண்ட படங்களை அம்னோ சார்பு வலைப்பதிவுகள் வெளியிட்டிருந்தன. அதில் உள்ள ஆடவர் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி என்றும் அவை கூறிக் கொண்டன.
பின்னர் அந்த விவகாரம் தொடர்பில் அஸ்மினின் மறுப்பறிக்கையுடன் அந்தப் படங்களையும் உத்துசான் வெளியிட்டிருந்தது.
அந்த நாளேடு தான் வெளியிட்ட செய்தியை மீட்டுக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நேற்று அஸ்மின் அலி கோரியிருந்தார்.
உத்துசான் மலேசியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கும் அவர் 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டையும் கோரியுள்ளார்.
தமது நடத்தக்கு களங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு அன்மைய காலமாக வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் ‘கழிப்பறை ஏற்பாடு’ கடைசியானது எனவும் அஸ்மின் கூறிக் கொண்டார். பெர்சே 3.0ல் குழப்பத்தைத் தூண்டி விட்டதாகவும் அவர் மீது குறை கூறப்பட்டுள்ளது.