தேர்தல் ஆணையம்: அம்பிகா “ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்”

பெர்சே 3.0 பேரணியில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த தேர்தல் சீர்திருத்தம் கோரும் அமைப்பை மட்டந்தட்டியதோடு பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவை “ஜனநாயகத்தை அழித்தவர்” என்றும் கூறியுள்ளது.

தேர்தல் சீர்திருத்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் பெர்சேயுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாது என்று அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமார் இன்று உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடந்த பேரணி “ஜனநாயகத் திடலில் தோற்கடிக்கப்பட்ட கலகக்காரர்கள் விளையாடிய வஞ்சக ஆட்டம்” என்று வான் அஹமட் கூறினார்.

“உண்மையில், மலேசியா ஜனநாயக முறையை வலுவாக ஆதரிக்கும் நாடு. அதில் மக்கள் வாக்குப் பெட்டிகளின் வழி முடிவெடுக்கும் சக்திகளாக விளங்குகின்றனர்” என்று அவரை மேற்கோள்காட்டி உத்துசான் எழுதியுள்ளது.

“அம்பிகாவுக்கும் அவரது கலகக்கார கூட்டத்தினருக்கும் தலையீட்டுரிமை கிடையாது. மேலும், பெர்சே 3.0 ஒரு சட்டவிரோத அமைப்பு. இதில் இப்போது ஈடுபாடுள்ளது நாடாளுமன்றமே.

“ஆகவே, இந்த இரண்டாவது தொடக்கத்திலிருந்து, தேர்தலை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்த இசியின் ஈடுபாடு மற்றும் ஆழ்ந்த கவனிப்பு நாடாளுமன்றத்திலிருந்துதான் வரும்.”
அந்த அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளிதழின் கூற்றுப்படி வான் அஹமட், அம்பிகாவை இன்னொரு ஆர்வலராகத்தான் பார்க்கிறார், இதர நாடுகளில் அவர் கண்டுள்ள ஜனநாயகத்தை ஒழிக்க விரும்புகிறவர்களைப் போலத்தான்.

“முன்பு நான் அமெரிக்காவில் வாழ்ந்திருக்கிறேன். அம்பிகாவை போன்ற பல ஆர்வலர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.

“உன்னத ஜனநாயகத்தின் விளைவாக நாம் மேம்பாடு அடைந்தோம்.”

“உண்மையாகவே, ஒரு கட்சி நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருந்தால் அக்கட்சி அதன் ஆட்சியைத் தவறான வழிகளின் மூலம் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்ற கருத்து மேல்நாடுகள் இருக்கிறது. அதே கருத்தைத்தான் பிஎன்னுக்கு எதிராக மேல்நாடுகள் கொண்டுள்ளன.

“மாறாக, நாம் வரலாற்றுக் கோணத்தில் ஆய்ந்தால், பிற்போக்கு நாடாக இருந்த நாம் தற்போதைய தகுதிக்கு மேம்பாடடைந்தது உன்னத ஜனநாயகத்தின் விளைவாகும்.”

ஆனால், வெளிநாட்டினரும் அம்பிகாவும் இதனைப் போற்றுவதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை என்று வான் அஹமட் விவரித்தார்.

“ஆகவே, இதற்குப் பின்னர் இசியின் வேலையும் ஈடுபாடும்  நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள 22 பரிந்துரைகளுக்கு ஏற்ப செயல்படுவதாக இருக்கும்.

“ஜனநாயகத்தை அழிப்பவரோடு நாங்கள் இனிமேலும் எதுவும் செய்யமாட்டோம்”, என்று மீண்டும் வலியுறுத்தினார்.

வான் அஹமட்டை பொறுத்தவரையில், பிகேஆர் தலமைச் செயலாளர் சைப்புடின் நசுதியன், வான் அஹமட்டிடம் மன்னிப்பு கோரமாட்டார். மாறாக, வான் அஹமட் ஓர் அம்னோ உறுப்பினர் என்ற தமது குற்றச்சாட்டை நிலைநிறுத்துவதாக கூறினார் என்று மலாய் நாளிதழான சினார் ஹரியான் இன்று கூறியது.

வான் அஹமட் ஓர் அம்னோ உறுப்பினர் என்ற குற்றச்சாட்டை அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் தாம் அம்னோவில் உறுப்பினராக சேரவே இல்லை என்று கூறினார்.

வான் அஹமட் அவரது நிலைப்பாட்டிற்கான ஆதரத்தை வழங்க வேண்டும் என்று சைப்புடின் சினாரிடம் கூறினார்.

“எனது ஆதாரம் தவறு என்றால், உண்மையான ஆதரத்தைக் காட்டுங்கள். அது எனது முதல் கேள்வி. எந்தக் கிளையில் அவர் உறுப்பினராகச் சேர்ந்தார், கிளந்தான் இல்லை என்றால். அல்லது அவரை நேர்மையற்றவர் என்று கருதுவேன்”, என்று சைப்புடினை மேற்கோள்காட்டி சினார் எழுதியுள்ளது.

மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான சைப்புடின் தமது குற்றச்சாட்டுக்கான பதிலை வான் அஹமட் மாற்றிக்கொண்டுள்ளார் என்றார்.

 

TAGS: