தேசிய பேராசிரியர் மன்றம் (எம்பிஎன்) இன்று புக்கிட் கெப்போங் சர்சையில் இறங்கி இடதுசாரி இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்று வலியுறுத்தியது.
மாறாக, அந்த மன்றம் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியையும் (சிபிஎம்)உள்ளடக்கிய இடதுசாரி இயக்கத்தினரை “துரோகிகள்” என்று கூறியது. ஏனென்றால் அந்த இயக்கம் மலாய் ஆட்சியாளர்களை அகற்றி விட்டு குடியரசை உருவாக்க விரும்பியதாக அம்மன்றம் காரணம் கூறியது.
“சிங்கப்பூரில் 1930 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிபிஎம் மலாயாவில் ஒரு மக்கள் ஜனநாயக குடியரசை அமைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. அது கம்யூனிஸ்ட் சீனவுடன் தொடர்பு கொண்டிருந்தது…
“இந்த கம்யூனிஸ்ட்களின் இலக்கு மலாயாவை பிரிட்டீஸ் ஆட்சியிலிருந்து விடுவிப்பதல்ல, அது (பிரிட்டீஸ்) மலாய் ஆட்சியாளர்களை அங்கீகரித்துள்ளது, ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டை உருவாக்குவதாகும்”, என்று வரலாற்று ஆசிரியர் ஸைனால் கிளிங் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“ஒரு குடியரசை உருவாக்குவதற்கு அனைத்து மலாய் தேசியவாதிகளும் கம்யூனிஸ்ட் போராட்டவாதிகளுடன் சேர்ந்து கொண்டனர், ஒத்துழைத்தனர், உடந்தையாக இருந்தனர்”, என்று அவர் மேலும் கூறினார்.
“இதன் காரணமாக நாம் அவர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் (கம்யூனிஸ்ட்கள்) நியாயமற்ற முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினர்”, என்று சுல்தான் இட்ரீஸ் கல்வி கற்பிக்கும் பல்கலைக்கழகத்தின் (யுபிஎஸ்இ) ஆசிரியரான கிளிங் கூறினார்.
இப்பிரச்னை புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் மீது மாட் இந்ரா நடத்திய தாக்குதல் குறித்து பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு கூறிய கருத்தைத் தொடர்ந்து உருவானது.
மலாயா ”காலனியல்ல”, வெறும் “பாதுகாக்கப்பட்ட” நாடு
மேலும், எம்பிஎன் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில் இடதுசாரி இயக்கம் சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கம் அல்ல என்றும் அதன் நோக்கம் மலாயாவை இந்தோனேசியாவுடன் இணைத்து இந்தோனேசியா ராயா என்ற நாட்டை உருவாக்குவதாகும் என்றும் குறிப்பிட்டது.
மலாயா மக்கள் ஜப்பானிய எதிர்ப்பு படையின் மூலம் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்தனர். ஏனென்றால் 1937 லிருந்து 1945 வரையில் சீனா மீதான ஜப்பானின் படையெடுப்பால் அவர்கள் “சினமும் அவமானமும்” அடைந்திருந்தனர் அந்த எம்பிஎன் அறிக்கை கூறியது.
“அவர்கள் மலாயவின் விடுதலைக்கோ மலாய் மாநிலங்களின் இறையாண்மையை நிலைநிறுத்துவதற்காகவோ போராடவே இல்லை”, என்று அறிக்கை மேலும் கூறியது.
1957 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின்னரும் சிபிஎம் அதன் போராட்டத்தைத் தொடர்ந்தது என்றும் அம்மன்றம் கூறியது.
ஸைனால் கிளிங் கூறியதில் கவனத்தை ஈர்க்கும் தகவல் இதுதான்: மலாயா உண்மையிலேயே “காலனியாக்கப்பட்டதே இல்லை”; அது பிரிட்டீசாரின் “பாதுகாப்புக்கும் பகுதி கட்டுபாட்டிற்கும் (Protectorate)” மட்டுமே உட்பட்டதாகும்.
1874 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பங்கோர் ஒப்பந்தத்திற்குப் பிறகு எந்த ஆவணமும் மலாயா காலனியாக்கப்படும் என்ற கூறவில்லை என்றாரவர்.
“பாதுகாப்புக்கும் பகுதி ஆட்சிக்கும் உட்பட்டிருப்பது என்பதும் காலனியாக்கப்பட்டிருப்பது என்பதும் ஒன்றல்ல. மூன்று நாடுகள் மட்டுமே காலனியாக்கப்பட்டன – சிங்கப்பூர், மலாக்கா மற்றும் பினாங்கு…400 ஆண்டுகாலமாக (மலாயா) காலனியாக இருந்தது என்று கூறுவதை நிறுத்துங்கள். அது ஒரு பெரும் தவறாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.
1946 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 1947 ஆம் ஆண்டு இறுதி வரையில் மலாயன் யூனியன் காலத்தில் மலாயா இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே காலனியாக இருந்ததோடு ஜப்பானியர் ஆட்சியிலும் காலனியாக இருந்தது என்று விளக்கமளித்தார்.
மலாயா காலனியாக்கபடவே இல்லை. “பிரிட்டீஸ் நிருவாகம் ஒரு வகையான காலனித்துவம்” என்று எம்பிஎன் அறிக்கையில் கூறப்பட்டது.
“ஆளுகை மற்றும் நிதி ஆகியவற்றோடு இயற்கை வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றை ‘நிருவகிப்பதற்கு’ பிரிட்டீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
“காலனித்துவ பிரிட்டனின் வரலாற்றை ஆய்வு செய்யும் வரலாற்று ஆசிரியர்கள் இந்த ‘காலனித்துவ’ நடத்தையை ‘நம்பிக்கைத்துரோகம்’ என்றும் ‘மறைமுகமான ஆட்சி’ என்றும் முத்திரை குத்துகின்றனர்”, என்று அறிக்கை மேலும் விவரிக்கிறது.
பிரிட்டீசார் மலாயவை ஆண்டபோது, நாடு அதன் மலாய் ஆட்சியாளர்களின் கீழ் இறையாண்மை கொண்டிருந்தது.
மாட் சாபுக்கு உரிமை உண்டு
மலேசியாவின் வரலாற்று சம்பவங்கள், புக்கிட் கெப்போங் உட்பட, மீதான பட்டறை ஒன்றை அடுத்த மாதம் யுபிஎஸ்இ இல் நடத்த விருப்பதாக தேசிய பேராசிரியர் மன்றத்தின் தலைவர் ஸாகிரி அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
பாஸ் துணைத் தலைவர் மாட் சாபுவின் அறிக்கை குறித்து கருத்துரைத்த ஸாகிரி, நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். தமது கருத்தைத் தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு என்றார்.