பெர்சே ‘ரௌடிகளுக்கு’ எதிராக படை பலத்தைப் பயன்படுத்திய போலீஸ்காரர்களை மகாதீர் ஆதரிக்கிறார்

கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுடைய அடாவடித்தனத்தை நிறுத்தவும் சக போலீஸ் அதிகாரிகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்கவும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் படை பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

“போலீசார் என்ன செய்ய வேண்டும் ? அந்த ரௌடிகள் தாங்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிப்பதா ?  ரௌடிகளினால் உதைக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதா ? தங்களுடைய ரோந்து வாகனம் நொறுக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டதை சகித்துக் கொள்ள வேண்டுமா ?” என மகாதீர் தமது வலைப்பதிவில் வினவியுள்ளார்.

“பாதுகாப்பையும் பொது ஒழுங்கையும் உறுதி செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு போலீஸ் பலத்தைக் காட்டுவது அவசியம் என்றாலும் பொறுப்பற்ற தரப்புக்களினால் குறிப்பாக வழக்குரைஞர் மன்றத்தினால் “போலீஸ் முரட்டுத்தனம்” என்ற சொல் ‘கண்மூடித்தனமாக” பயன்படுத்தப்படுகிறது.”

பெர்சே 3.0 ஆர்ப்பாட்டக்காரர்கள் “நிச்சயமாக வன்முறையாக” நடந்து கொண்டனர் எனக் குற்றம் சாட்டிய மகாதீர், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தேவையானதையே செய்தார்கள் என்றார்.

“வீடியோ பதிவுகளையும் படங்களையும் பார்க்கும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை மட்டும் மீறவில்லை. அந்தத் தடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்ப்பதை தடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர்களையும் தாக்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.”

“அவர்கள் போலீஸ் கார்களைத் துரத்தினர். கண்ணாடிகளை நொறுக்கினர். அதனை தலைகீழாக கவிழ்த்தனர். அவர்கள் ஒரு போலீஸ்காரரை உதைத்தனர். அதனால் அவர் கீழே விழுந்தார்.”

உண்மையாகச் சொன்னால் வெளிநாடுகளில் உள்ள போலீசாருடன் ஒப்பிடுகையில் மலேசியப் போலீசார் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாக மகாதீர் சொன்னார்.

“மற்ற நாடுகளில் போலீசார் தங்களைத் தாக்குகின்றவர்களை மிரட்டுவதோடு நிற்க மாட்டார்கள். சுடவும் செய்வார்கள். இங்கு போலீசார் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்பது உறுதி. அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.”

அந்தப் பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது மீது கடந்த வாரம் தனது அவசரப் பொதுக் கூட்டத்தில் பல தீர்மானங்களை நிறைவேற்றிய வழக்குரைஞர் மன்றத்தையும் மகாதீர் சாடினார்.

“அடுத்த வன்முறை ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் நிகழும் போது சட்டத்தையும் ஒழுங்கையும் வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்கள் நிலை நிறுத்த அனுமதிப்போம். ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டங்களையும் விதிகளையும் மீறுவதிலிருந்து தடுக்கப்பட மாட்டார்கள் என்பதால் பெர்சே 4.0ல் வன்முறைகள் ஏதும் இருக்காது என நான் நிச்சயமாக நம்புகிறேன்,” என அந்த மூத்த அரசியல்வாதி கிண்டலாகக் கூறினார்.