உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள இசா கைதிகளை சுஹாக்காம் சந்திக்கும்

பேராக் கமுந்திங் தடுப்புக் காவல் மய்யத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தடுப்புக் காவல் (இசா) கைதிகளைக் காண்பதற்கு சுஹாக்காம் என்னும் தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கு செல்லும்.

அந்தக் கைதிகளின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக மூவர் கொண்ட குழு ஒன்று அந்த தடுப்பு மய்யத்துக்குச் செல்லும் என சுஹாக்காம் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் கூறினார்.

“கைதிகளைச் சந்திப்பதும் அவர்களுடைய உண்ணாவிரதத்துக்கான காரணங்களையும் மேலும் தகவல்களையும் அறிந்து கொள்வதே நாங்கள் செல்வதின் நோக்கம். அதனைத் தொடர்ந்து நாங்கள் அந்த விவகாரத்தை ஆராய முடியும். அவர்களுடைய நல்வாழ்வு பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்றும் நாயகம் சொன்னார்.

கிடைக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதால் எத்தனை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், எத்தனை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களையும் சுஹாக்காம் உறுதி செய்யும்.

“உண்ணா விரதப் போராட்டம் நிகழ்கிறது என்பது மட்டுமே இப்போது எங்களுக்குத் தெரிந்த விஷயமாகும்,” என்றார் அவர்.

சுஹாக்காம் இன்று அங்கு செல்வதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும் தடுப்பு மய்யத்தில் உள்ள அதிகாரிகளுடன் பயணத்தை ஒருங்கிணைப்பதற்காகவும் வெள்ளிக்கிழமைக்கு அந்தப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது என்றும் நாயகம் தெரிவித்தார்.

இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள கைதிகளுக்குத் தேவைப்பட்டால் மருத்துவக் கவனிப்பை வழங்குமாறு அவர் அந்த மய்யத்தின் கண்காணிப்பாளர்களை கேட்டுக் கொண்டார்.

அந்த உண்ணா விரதம் நான்கு நாட்களுக்கு முன்னர் தொடங்கியதாக நேற்று சுவாராம் தகவல் வெளியிட்டது.

” இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ள வேளையில் தாங்கள் ஏன் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் என்பது கைதிகளுக்குப் புரியவில்லை. அந்தக் கைதிகளுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என்றால் அவர்களை அது விடுவிக்க வேண்டும்,” என சுவாராம் கூறியது.

அந்தக் கைதிகளை விடுவிப்பதா அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதா என்பதை முடிவு செய்வதற்கு தமக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை என்றாலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.