பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவரின் உடல் பெளத்த சமயச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்படவிருந்ததை வைத்து சமய உணர்வுகளைக் கிளறிவிட வேண்டாம் என அம்னோவை எச்சரித்துள்ளார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரபலப்படுத்திவரும் 1மலேசியா கோட்பாட்டைப் பார்க்கும்போது அம்னோ மிதவாதக் கட்சிபோல் காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்ட லிம், ஆனால், இன, சமய விவகாரங்களில் அதன் போக்கு மாறவில்லை என்றார்.
“சமய உணர்வுகளை வைத்து விளையாட வேண்டாம் என்று அம்னோவை எச்சரிக்க விரும்புகிறேன்.மதம் மாறியவரின் சடலம் முஸ்லிம் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் லிம் கூறினார்.
“அப்பிரச்னைக்கு பினாங்கு இஸ்லாமிய சமய மன்றமும்(MAIPP), இறந்தவரின் குடும்பத்தாரும் தீர்வு கண்டுவிட்டனர்”, என்றார்
மதம் மாறியதைக் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காத ஆயர் ஈத்தாமைச் சேர்ந்த காலஞ்சென்ற கூ ப்பூ சூ,55, கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய சடங்குமுறைகளுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், சனிக்கிழமை மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், அவ்விவகாரத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு டிஏபி தலைமையிலான அரசுக்கு மாநில இஸ்லாமிய மன்றத்தை நிர்வகிப்பதில் திறமை இல்லை என்பதைக் காண்பிப்பதாகக் கூறினார்.
MAIPP தலைவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அப்துல் மாலிக் அப்துல் காசிம் திறமையாக செயல்பட்டிருந்தால் கருத்துவேறுபாட்டைத் தவிர்த்திருக்க முடியும் என்று சைனல் கூறினார்.
முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.ஆனால், மாநில அரசின் நிர்வாகக்கோளாற்றின் காரணமாக அடக்கம் செய்வதில் பலநாள் தாமதம் ஏற்பட்டதாக அவர் குறைகூறினார்.
இதனிடையே டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், மலாய் உரிமைக்காகப் போராடும் பெர்காசா அமைப்பும் “வேறு சில தீவிரவாதத் தரப்புகளும்” அம்னோவின் ஆதரவுடன் சடலத்தைப் பறித்துச் செல்ல சீனர்களின் ஈமச் சடங்குக் கூடத்துக்கு வந்திருந்ததாகக் கூறினார்.
“யாரும் ஒருவரின் சடலத்தை அப்படியே பறித்துச் செல்ல முடியாது.அம்மனிதர் மதம் மாற்றப்பட்டது இந்தோனேசியாவில், மலேசியாவில் அல்ல. அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது”, என்றாரவர்.
அவர் மதம் மாறியது உறுதியாக தெரிந்த பின்னர் கூவின் உடல் MAIPP -இடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பின்னரும் சைனல் அவ்விவகாரத்தைக் கிண்டிக் கிளறிக்கொண்டிருப்பது ஏன் என்று லிம் வினவினார்.
“நாங்கள் முஸ்லிம் விவகாரங்களில் தலையிடுவதில்லை.சட்டப்படி நடக்கும்படி விட்டு விடுவோம்.
“சைனலுக்கு தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.அவருக்கு வாக்குகள் வேண்டும்.அதற்காக மலாய்க்காரர்-அல்லாதாருக்கு முஸ்லிம்-அல்லாதாருக்கும் எதிராக இன, சமய உணர்வுகளைப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள்”, என லிம் வலியுறுத்தினார்.