போலீஸ், மலேசியாகினி பட-பத்திரிக்கையாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் செய்த மலேசியாகினி பட-பத்திரிக்கையாளர் கோஜுன் லின்-னின் வாக்குமூலத்தைக் கோலாலம்பூர் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

நேற்று 90 நிமிடங்களுக்கு புலனாய்வு அதிகாரி அபாண்டி காசிம், அந்தப் பேரணியில் கோ பார்த்த நிகழ்வுகள் பற்றி கோ-விடம் கேள்விகளைத் தொடுத்தார்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் அணிந்திருந்த தொப்பிகள் அல்லது பிரிவுச் சின்னங்கள் பற்றி அபாண்டி விசாரித்தார்.

“சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீங்கள் அடையாளம் காண முடியாது என்பதால் குறைந்தது அவர்கள் சார்ந்துள்ள பிரிவுகளையாவது நீங்கள் சுட்டிக் காட்ட முடியும். அன்றைய தினம் டாத்தாரான் மெர்தேக்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர்கள் கோலாலம்பூருக்கு வெளியிலிருந்து பேராக், பாகாங் ஆகியவற்றிலிருந்து கொண்டு வரப்பட்டனர்…,” என அபாண்டி விளக்கினார்.

தவறுகள் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அதற்கு சில போலீஸ் பிரிவுகள் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் சொன்னார். அதனால் அவை விளக்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அதனால் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அபாண்டி கூறிக் கொண்டார்.

ஆகவே அந்த விவகாரம் மீது பரிந்துரைகளை வழங்குமாறு குற்றப் புலானாய்வுத் துறைக்கு பணிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் கோ-விடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கேமிரா நினைவு கார்டு பற்றி அபாண்டியால் எந்தத் தகவலும் கொடுக்க முடியவில்லை. அந்தக் கார்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது என தாம் எண்ணியதாக அவர் சொன்னார்.

உண்மையில் தவறு செய்ததாக கூறப்படும் போலீஸ் அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கான படங்களை கோ வழங்க முடியும் எனத் தாம் நம்பியிருந்ததாகவும் அவர் சொன்னார்.

அந்தப் பேரணியின் போது மாலை மணி 5.30 வாக்கில் ஜாலான் ராஜா- ஜாலான் துன் பேராக் சந்திப்பில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றதை கோ படம் பிடித்துக் கொண்டிருந்த போது கோ கைது செய்யப்பட்டார். ஒரு முறை தாக்கப்பட்டார். நிருபர் என அடையாளம் காட்டிய போதிலும் அவரது கேமிரா நினைவு கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் மறு நாள் டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் புகார் செய்தார்.

மற்ற புகார்கள்

அந்தப் பேரணி குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த போது தங்களிடமும் போலீஸ்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் புகார் செய்துள்ளனர். தாங்கள் அடிக்கப்பட்டதாகவும் தங்களுடைய சாதனங்கள் நொறுக்கப்பட்டன அல்லது பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குவாங் மிங் நாளேட்டின் படப் பிடிப்பாளர் வோங் ஒன் கின் னை தாக்கியதாக இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சன் நிருபர் ராட்ஸி ரசாக் பல போலீஸ்காரர்களினால் அடிக்கப்பட்டதால் தமது தாடை எலும்பு முறிந்து விட்டதாக புகார் செய்துள்ளார்.

அவர் மே 17ம் தேதி அடையாள அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டார். ஆனால் தம்மைத் தாக்கிய யாரையும் அவரால் அடையாளம் காண முடியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த இன்னொரு அடையாள அணிவகுப்பு காலவரம்பின்றித் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.