தாயிப், மூசா மீதான புலனாய்வுகள் “இன்னும் முடியவில்லை”

முதலமைச்சர்களான தாயிப் மாஹ்முட், மூசா அமான் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணைகள் இன்னும் முடியவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) உயர் நிலைக் குழுவான நடவடிக்கை மறு ஆய்வுக் குழுத் தலைவர் ஹாடெனான் அப்துல் ஜலில் கூறுகிறார்.

“எம்ஏசிசி அந்த விசாரணைகளை இன்னும் முடிக்கவில்லை. அவை மூடப்பட்டிருந்தால் நான் இன்று உங்களுக்கு அறிவித்திருப்பேன்,” என்றார் அவர்.

“என்றாலும் புலனாய்வு அறிக்கைகள் இன்னும் சமர்பிக்கப்படாததால் அந்தக் கோப்புக்கள் இன்னும் திறந்திருக்கின்றன.”

இந்த நாட்டில் நீண்ட் காலத்துக்கு முதலமைச்சராக பணியாற்றி வரும் தாயிப் மீது அதிகார  அத்துமீறல், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவருக்கு எதிராகப் பல புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எம்ஏசிசி தனது விசாரணைகள் மீது ஆழ்ந்த மௌனம் சாதிக்கிறது.

சரவாக் முதலமைச்சருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள ஊழல் புகார்கள் குறிப்பாக மாநிலத்தில் வெட்டுமர சலுகைகள் வழங்கப்பட்டது மீது எம்ஏசிசி விசாரிப்பதை கடந்த ஆண்டு அதன் தலைமை ஆணையர்  காசிம் அகமட் ஒப்புக் கொண்டார்.

எம்ஏசிசி-யுடன் தாயிப்புடன் தொடர்புடையது எனக் கூறப்படும் சட்ட விரோத நிதிச் சொத்துக்கள் ஸ்விஸ் வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளது மீது ஸ்விட்சர்லாந்தில் உள்ள நிதி கண்காணிப்பு அமைப்பு ஒன்றும் விசாரித்து வருகிறது.

இதனிடையே மூசா-வுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்- வெட்டுமர ஊழல் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் அவரது சகோதரரும் வெளியுறவு அமைச்சருமான அனீபா அமானும் சம்பந்தப்பட்டுள்ளார்.

 

TAGS: