பிரிட்டனில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த கணிசமானவர்கள் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியிலான முயற்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே தஞ்சம் தேவைப்படுபவர்களுக்கு பிரிட்டன் தஞ்சம் வழங்கும் என்றும், தஞ்சத்துக்கான நியாயமான தேவை இல்லாதவர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் ஒரு நபருக்கு அனைத்துலக பாதுகாப்பு தேவையில்லை என்று தாம் உணரும் பட்சத்திலேயே அவரை தாம் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாகவும், எல்லா தமிழர்களுக்கும் பாதுகாப்பு தேவையில்லை என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் பிரித்தானிய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
சுமார் 70 பேர் வரை இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்ததாகவும், அவர்களில் 36 பேர் மாத்திரமே இலங்கைக்கு அனுப்பப்பட மீதி அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டதாக, இத்தகைய தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய சட்ட நிறுவனங்களில் ஒன்றான வில்சன் சொலிசிட்டர்ஸ் நிறுவனத்தின் சட்ட நிறைவேற்று அதிகாரியான முஹமட் பஃமி கூறினார்.
பொதுவாக ஒவ்வொரு நபரின் வழக்கும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய அவர், தமது நிறுவனத்தின் சார்பிலான வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முதல் தடவையாக மனித உரிமைகள் காப்பகத்தின் அறிக்கையில் இலங்கை பாதுகாப்பான இடமாக இல்லை என்ற வகையில் கூறப்பட்ட கருத்தை ஏற்று அதனடிப்படையில் திருப்ப அனுப்பப்பாவிருந்தவரை நிறுத்தியதாக தெரிவித்தார்.
இவ்வாறு மனித உரிமைகள் காப்பகட்தின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றிருப்பது தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களின் விவகாரத்தில் மிகவும் முக்கியமான அம்சம் என்றும் அவர் கூறினார்.