சிலாங்கூர் மாநில அரசு, அம்மாநிலத்தில் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள மேற்கொண்டிருக்கும் ‘சிலாங்கூர்கூ பெர்சே’ என்ற இயக்கம் அதன் அதிகாரத்தைமீறிய செயலாகும் என்பதால் அதனைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அவ்வியக்கத்தைத் தொடக்கிவைத்த மந்திரி புசார் காலிட் இப்ராகிம், வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்தும் பணியில் மாநில அரசு ஊழியர்களையும் கம்பத்துத் தலைவர்களையும் ஈடுபடுத்தியுள்ளார்.
அவர்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொள்வார்கள்.
அம்மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்திருப்பது பல ஐயப்பாடுகளுக்கு இடமளித்துள்ளது. வெளிநாட்டவர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டதும் மாநிலத்துக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் சிலாங்கூருக்கு மாற்றப்பட்டதும் காரணமாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதற்காகத்தான் மாநில அரசு சிலாங்கூர்கூ பெர்சே என்ற இயக்கத்தைத் தொடங்கியது.
ஆனால், வீட்டுவீடு சென்று வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் அதிகாரம் தேர்தல் ஆணைய(இசி)த்துக்கு மட்டுமே உண்டு என்று நோ ஒமார் இன்றைய உத்துசான் மலேசியாவில் கூறியுள்ளார்.சிலாங்கூரில் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு இசி நடத்திய விழிப்புணர்வு இயக்கம்தான் காரணம் என்றாரவர்.
“மாநில அரசு வீடுவீடாகச் சென்று வாக்காளர்கள் பற்றிய விவரங்களைச் சரிபார்க்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.இதைச் செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.
“அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?மாநில அரசின் பேராளர்களோ கிராம மேம்பாட்டு, பாதுகாப்புக் குழுக்களோ(ஜேகேகேகே) வீடுகளுக்கு வந்து வாக்காளர்கள் விவரங்களைச் சரிபார்க்க முனைந்தால் இடமளிக்காதீர்கள்”, என்றவர் கூறியதாக அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேடு கூறியது.
இந்த இயக்கத்துக்கு மறைமுகமான அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று விவசாயம், விவசாயம் சார்ந்தத் தொழில் அமைச்சரான நோ கூறினார்.
“அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்றால், இந்த இயக்கத்தையே பயன்படுத்தி, ஆவி வாக்காளர்கள் இருப்பதாகவும் இசி மோசடி செய்துவிட்டது என்றும் கூறுவார்கள்”, என்றாரவர்.