பிகேஆர்: கடற்படை இரகசியம் ‘விற்கப்பட்டதை’ நஜிப் விளக்க வேண்டும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்று கடற்படை இரகசிய ஆவணம் ஒன்றை மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு ‘விற்பனை’ செய்திருப்பதை பிரான்சின் அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கண்டுபிடித்திருப்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக பிகேஆரும் குரல் கொடுத்துள்ளது.

அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி (படத்தில் நடுவில் இருப்பவர்), ஆவணம் விற்கப்பட்டதாகச் சொல்லப்படும் காலத்தில் நஜிப்தான் தற்காப்பு அமைச்சராக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதற்கு நஜிப்தான் பதில் சொல்ல வேண்டும். ஆயுதப்படைகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் ஒதுங்கிக்கொள்ளக்கூடாது என்று அஸ்மின் இன்று கட்சித் தலைமையகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் கூறினார்.

“பிரதமர் இதைச் சாதாரணமாக நினைக்காமல், அவரே முன்வந்து அரசின் இரசியங்கள் அவரின் ஆலோசகரால் எப்படி விற்க முடிந்தது என்பதை விளக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்….இவ்விவகாரத்தில் அதிகாரிகள் பலிகடாக்கள்  ஆக்கப்படக்கூடாது என்றும் விரும்புகிறோம்.”

இவ்விவகாரத்தில் ஆயுதப்படைகளும் உள்விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். அதன் அதிகாரிகள் அதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தால் போலீசில் புகார் செய்ய வேண்டும்.

“ஆயுதப்படைத் தலைவர்கள் அவர்களின் மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க போலீசில் புகார் செய்ய வேண்டும்”, என்றவர் சொன்னார்.

 

 

TAGS: