சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், WWW15 எண் தகட்டுக்கு தாம் ஏலம் கேட்டுள்ளது தொடர்பில் சாலைப் போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள மூன்று தேர்வுகளில் இதுவரையில் எதனையும் தேர்வு செய்யவில்லை.
தமது அதிகாரிகளுக்கு இது வரையில் லியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அந்தத் துறையின் தலைமை இயக்குநர் சோலா மாட் ஹசான் ஜோகூர் பத்து பகாட்டில் கூறியதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
லியாவ் பதில் கொடுப்பதற்கு எந்தக் காலக் கெடுவையும் சாலைப் போக்குவரத்துத் துறை நிர்ணயிக்கவில்லை.
தமது அமைச்சர் தகுதிக்கு இணங்க அந்த எண் தகட்டை இலவசமாக ஏற்றுக் கொள்வது, ஏல விலையான 24,200 ரிங்கிட்டை செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்வது, அந்த எண் தகட்டை நிராகரிப்பது ஆகியவை லியாவுக்கு உள்ள மூன்று தேர்வுகள் என இதற்கு முன்னர் சோலா ஊடகங்களிடம் கூறியிருந்தார்.