“பினாங்கு பிஎன்னில் பிளவு இல்லை”

பினாங்கு பிஎன் தலைவர்கள்,அம்மாநிலத்தில் பிஎன் ‘ஏ டீம்’, ‘பி டீம்’ என்று பிளவுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கின்றனர்.பினாங்கைத் தீர்வையற்ற துறைமுகமாக்க வேண்டும் என்ற பரிந்துரை போன்ற விசயங்களில் அதன் தலைவர்களின் எதிர்வினை ஒரேமாதிரியாக இருப்பதே இதற்குச் சான்று.

மாநில கெராக்கான் தலைவர் டெங் ஹொக் நான், மாநில பிஎன் தலைவர் டெங் சாங் இயோவுடன் சேர்ந்து வேலை செய்வதில் பிரச்னை எதுவும் இல்லை என்றார்.

“உள்கட்சி வேறுபாடு என்று பார்த்தால் டிஏபி-இல்கூட கருத்துவேறுபாடு கொண்ட பல தரப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன”.நேற்று பினாங்கில்  மாநில பிஎன் தலைமையகத்தில் ஒரு கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ஹொக் நான் இவ்வாறு கூறினார்.

“டிஏபியில் அதன் தலைவர்(பினாங்கு முதலமைச்சர்)லிம் குவான் எங், (துணை முதலமைச்சர்II)ராமசாமி ஆகியோர் ஒரு தரப்பிலும் கட்சித் தலைவர் கர்பால் சிங் இன்னொரு தரப்பிலும் உள்ளனர்.பிஎன்னில் உள்ள நாங்கள் எப்போதும் ஒரே குழுவாகத்தான் செயல்பட்டு வருகிறோம்”.

பினாங்கு தீர்வையற்ற துறைமுகப்  பரிந்துரை தொடர்பில் பினாங்கு பிஎன் தலைவர்கள் முன்னுக்குப்பின் முரண்படும் வகையில் பேசுவதாக பினாங்கு டிஏபி தலைவர் செள கொன் இயோ குறிப்பிட்டது பற்றிக் கருத்துரைத்தபோது ஹொன் நான் இவ்வாறு கூறினார்.

தீர்வையற்ற துறைமுகம் என்பது பரிந்துரை அளவில்தான் உள்ளது என்றும் அதில் ஒன்றும் இறுதிசெய்யப்படவில்லை என்றும் பிஎன் தகவல் பிரிவுத் தலைவர் எம்.லோக பாலா கூறினார்.இரண்டு டெங்குகளுக்குமிடையில் கருத்துவேறுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சாங் இயோ தம் திட்டங்கள் குறித்து பிஎன் தலைவர்களுக்கு சரியாக விளக்கமளிப்பதில்லை  என்று கூறப்படுவதையும் லோகா பாலா மறுத்தார்.

இதனிடையே சாங் இயோ, அண்மையில்தான் தாம் மாநில பிஎன் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகவும் ஆனாலும் தம் திட்டங்களைக் கூட்டணி தலைவர்கள் நன்கு அறிவர் என்றும் கூறினார்.

“ஏ டீம் பி டீம் என்று (டிஏபி) கதை கட்டிவிட்டிருக்கிறார்கள்.அப்படி எதுவும் இல்லை.நாங்கள் ஒரு குழுவாகத்தான் செயல்படுகிறோம்”, என்றாரவர்.

TAGS: