அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் முன்னர் ஹனீப் குழு ‘உண்மையைக் கண்டு பிடிக்கும்’.

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே 3.0 பேரணியின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை ‘ஹனீப் ஒமார் தலைமையிலான சுயேச்சைக் குழு’ ஆழமாக ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் காத்திருக்கிறது. அதற்கு பின்னரே தவறு செய்துள்ள தரப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

“அந்த சுயேச்சைக் குழு உண்மையைக் கண்டு பிடிக்கும்,” உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசோப் இன்று காலை மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

வன்முறையைத் தூண்டி விட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் எண்ணியுள்ளதா என பிஎன் ஜெம்போல் உறுப்பினர் லீலா யாசின் சமர்பித்த துணைக் கேள்விக்குப் பதில் அளித்த போது அபு செமான் அவ்வாறு தெரிவித்தார்.

“உண்மையைக் கண்டு பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்” எனக் கூறிய அவர் அதனால் தான் அந்த விவகாரத்தை ஆராயுமாறு சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொள்ளவில்லை என்றார் அவர்.

அத்துடன் அதனை விசாரிக்க ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தையும் நியமிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

என்றாலும் பேரணியில் நிகழ்ந்ததை அறிந்து கொள்ள தான் சொந்த விசாரணைக் குழுவை அமைப்பது அவசியம் என சுஹாக்காம் கருதினால் அவ்வாறு செய்யலாம் என்பதை அபு செமான் ஒப்புக் கொண்டார்.