தீர்வையற்ற துறைமுகம்- தெங் கூறியதற்கு நேர்மாறாக நஜிப் சொல்கிறார்

தீர்வையற்ற துறைமுகம் என்னும் கோட்பாட்டு இப்போது இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

ஜுன் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பினாங்குத் தீவின் தீர்வையற்ற துறைமுகத் தகுதி பற்றி டிஏபி  புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங் வினவிய போது பினாங்கு ஐந்து தீர்வையற்ற வாணிகப் பகுதிகளைப் பெற்றுள்ளதால் பினாங்குத் தீவு தீர்வையற்ற துறைமுகமாக மாறும் விவகாரமே எழவில்லை என நஜிப் பதில் அளித்தார்.

அந்தப் பதில் அடுத்த தேர்தலில் பினாங்கை பிஎன் மீண்டும் கைப்பற்றுமானால் பினாங்கு துறைமுகத்துக்குத் தீர்வையற்ற துறைமுகத் தகுதியை வழங்குவது பிஎன் வழங்கும் வாக்குறுதிகளில் ஒன்று என அந்த மாநிலத்துக்கு புதிய பிஎன் தலைவராக அறிவிக்கப்பட்ட தெங் சாங் இயாவு-வுக்கு பலத்த அடி எனக் கருதப்படுகின்றது.

தெங் தீர்வையற்ற துறைமுக தகுதியை மீண்டும் வழங்குவதாக கூறும் யோசனையை வழங்கி பெருத்த ஆரவாரத்துடன் பிஎன் தலைவர் என்ற தமது பணியைத் தொடங்கியதாக மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயூ கூறினார்.

அந்த யோசனை நஜிப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அதனை ‘சாதகமான’ கண்னோட்டத்துடன் பார்ப்பதாகவும் தெங் தெரிவித்திருந்ததாக சாவ் சொன்னார்.

“தெங்-கிற்கு அந்த ஆரவாரம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. நஜிப் அதனைச் சாதகமான கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை என்பது மட்டும் நிச்சயம்.” என அந்த மாநில டிஏபி தலைவர் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

டிஏபி-யின் எம்பி-க்களில் ஒருவருக்கு நஜிப் அளித்த அந்தப் பதிலில் காணப்பட்ட ‘தெளிவான நிலைமை’  டிஏபிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் சாவ் சொன்னார்.

நஜிப் அளித்த பதில், தீர்வையற்ற துறைமுகம் என்ற முழு யோசனையும் தெங்-கின் கற்பனையில் உதித்தது என்பதையும் அதனை கெரக்கான் தலைவர் டாக்டர் தெங் ஹாக் நான், அம்னோ தெலுக் பாகாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹில்மி யாஹ்யா தலைமையிலான பினாங்கு பிஎன்-னின் பி குழு ‘இடித்து தள்ளி விட்டது’ என்பதையும் மெய்பிப்பதாகவும் சாவ் குறிப்பிட்டார்.

“இது உண்மையில் ஒரே மலேசியா இரண்டு பினாங்கு பிஎன்-கள், மூன்று துறைமுக யோசனைகள்.”

“ஆனால் தீர்வையற்ற துறைமுக யோசனையை பிரதமர் சாதகமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார் என தெங் சொன்ன போது அவர் பினாங்கு மக்களிடம் பொய் சொன்னாரா என்பதே இங்கு முக்கியமாகும்,” எனவும் பினாங்கு டிஏபி தலைவர் வினவினார்.

“நாம் இன்னும் தெங்-கின் வார்த்தைகளை நம்பலாமா ?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.