பிஎன் இன வேறுபாடு காட்டுகிறதா? இல்லை என்கிறார் துணைப் பிரதமர்

மக்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் பாரிசான் நேசனல் இன வேறுபாடு காட்டுவதில்லை என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கூறினார்.

பிஎன் தலைமையிலான அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதி பெற்ற மற்றும் தேவைப்படும் அனைத்து இனத்திற்கும் வழங்கப்படுகின்றன என்றாரவர்.

மலாய்க்காரர்களின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்யானவையாகும் ஏனென்றால் மத்திய அரசாங்கம் வழங்கும் பல்வேறு உதவிகளை அனைத்து இனங்களும் பெற்றுள்ளன என்று முகைதின் கூறினார்.

“பின் மலாய்க்காரர்களுக்கு மட்டும், மலாய்க்காரர்களுக்கு மட்டுமே உதவியது என்றால், மலாய்க்காரர்கள் எப்போதோ கோடீஸ்வரர்களாகியிருப்பர். பினாங்கில், இன்னும் உதவி தேவைப்படும் மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். சீனர்களும் இந்தியர்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள்.

“நாங்கள் (பிஎன்) அனைத்து இனங்களுக்காகவும் போராடுகிறோம். பூமிபுத்ராக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் கொள்கை அவர்கள் மலாய்க்காரர்கள் என்பதால் அல்ல; அவர்கள் ஏழைகள் என்பதால் அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. இதர இனங்களுக்கும் அவ்வாறே செய்யப்படுகிறது”, என்று தாமான் தஞ்சோங் அமான், பட்டர்வொர்த்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் கூறினார்.

பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படும் உதவி உட்பட அரசாங்கம் வழங்கும் உதவிகளை அனுபவிக்கும் சம உரிமை அனைத்து இனங்களும் உண்டு என்று முகைதின் மேலும் கூறினார்.

“தேசிய மாதிரி பள்ளிகளுக்கும் சீனப்பள்ளிகளுக்கும் கூட நாங்கள் உதவுகிறோம்…அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு.  கல்வி அமைச்சர் என்ற முறையில், நாட்டின் அனைத்து குடிமக்களும் முறையான கல்வி பெறுவதை நான் உறுதி செய்கிறேன்”, என்றாரவர்.