பெர்சே 3.0: போலீஸ்காரர்களின் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பெர்சே 3.0 பேரணியில் குவாங் மிங் டெய்லி படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்ட போலீஸ்காரர்கள் இருவர்மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களைக் காட்சிக்கு வைக்க கால அவகாசம் தேவை என்று அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அது ஒத்திவைக்கப்பட்டது.

இனி, லான்ஸ் கார்ப்பரல் முகம்மட் அஸ்ரி முகம்மட் சோப்ரி, கான்ஸ்டபள் ஷாருல் நிஸா அப்ட் ஜாலில் ஆகிய இருவர்மீதான வழக்கு ஆகஸ்ட் 29-இல் கோலாலம்பூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

அவ்விருவரும், ஏப்ரல் 28-இல், ஜாலான் துன் பேராக் ஜாலான் ராஜா சந்திப்பில் மாலை மணி 5.20க்கும் 5.30க்குமிடையில் வொங் ஒன் கின்னுக்கு(இடம்) எதிராக வன்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் சீரமைப்புக்கு ஆதரவாக நடத்தப்பட்ட அப்பேரணியில் போலீஸ் வன்செயல்கள் பெருமளவில் நடைபெற்றதாகக் கூறப்ப்பட்டுள்ள போதிலும் இதுவரை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் அவ்விருவர் மட்டுமே.

நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் எதிர்தரப்பு வழக்குரைஞர் சுஸானாவதி இஸ்மாயிலைச் சந்தித்தபோது, அரசுதரப்பில் வொங்கின் போலீஸ் அறிக்கை,அவரது மருத்துவ அறிக்கை,சம்பவம் நிகழ்ந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பற்றிய  தடயவியல் அறிக்கை ஆகியவற்றை நீதிமன்றத்திடம் ஒப்படைத்திருப்பதாகக் கூறினார்.

“இன்னும் என்னென்னவற்றைக் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை”, என்றாரவர்.

எதிர்தரப்பு வழக்குரைஞர் குழுவுக்கு சலிம் பஷிர் தலைமை தாங்குகிறார்.